தீக்கதிர் செய்தி
சென்னை, மே 26-
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமல், தொலைக்காட்சியில் அடியெடுத்து வைக்கிறார். சர்வதேச நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சிதான் பிக் பாஸ். தற்போது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்நிகழ்ச்சி ஜுன் 25ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. தமிழில் ‘பிக் பாஸ்’ அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கேள்வி: நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?
பதில்: நான் அரசியலுக்கு வந்து வெகுநாட்களாகி விட்டது. 21 வயதில் என் கையில் எப்போது மை வைத்தேனோ அப்போதிலிருந்தே அரசியலில் இருக்கிறேன், ஆனால் போட்டி போடும் அரசியலில் இல்லை. யார் வருவார்கள், யார் வரக்கூடாது என்று முடிவு பண்ற வெகுஜன கூட்டத்தில் நானும் நின்று கொண்டிருக்கிறேன்.
ரஜினி அரசியலுக்கு வரலாம் என நினைக்கிறீர்களா..?
ரஜினி வரலாமா என்பதை 5 வருடங்கள் வரும் போது சொல்கிறேன்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழ் உணர்வோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம். காந்தி தமிழனா, நேரு தமிழனா, சுபாஷ் சந்திர போஸ் தமிழனா?. ஆனால் போஸ் என்ற பெயரில் என் ஊரில் நிறையப் பேர் இருக்கிறார்கள். காந்தி என்ற பெயரில் இந்தியா முழுக்க பலர் இருக்கிறார்கள். அக்கருத்தை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். என்னைப் பொறுத்தவரை கேரள மக்கள் என்னை மலையாளியாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அந்த ஊருக்கு முதல்வராக ஆவீர்களா என்று கேட்டால் எனக்கு ஆர்வமில்லை.
21 வயதிலிருந்து அரசியலில் இருக்கிறேன் என்கிறீர்கள். போட்டி போடும்அரசியலுக்கு எப்போது வரப்போகிறீர்கள்?
போட்டி என்ற வார்த்தையே தவறு. அரசியல் என்பது சேவை சம்பந்தப்பட்டது என்று நினைக்கும் போது, அதை சம்பாதிக்கக் கூடியஒரு அரங்கமாக நினைத்துக் கொள்வது தவறு.
இன்றைய அரசியல்வாதிகள் சேவையாக நினைக்கிறீர்களா?
கண்டிப்பாக இல்லை என்பது நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா?
ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று கூறியுள்ளார். அதைப் பற்றி உங்களுடைய கருத்து?
அது எல்லாரும் சொல்லும் குற்றச்சாட்டு தான். அவரும் சொல்லியிருக்கிறார். வித்தியாசமாக ஒன்றும் சொல்லவில்லை. தவறாகவும் சொல்லவில்லை.
என்ன சிஸ்டம் மாற வேண்டும் என நினைக்கிறீர்கள்?
அரசியல் என்பது சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு இனிமேல் வரப்போகும் முதல்வருக்கோ, மந்திரிக்கோ நல்ல சம்பளம் கொடுத்து, எங்களுக்காக வேலை செய்கிற நீ என்று சொல்லிவிட வேண்டும். நீங்கள் தியாகம் செய்யுங்கள், சேவை செய்யுங்கள் என்று சொல்வதினால் சேவை செய்வதாக நினைத்துக் கொண்டு வேறு விஷயங்கள் செய்கிறார்கள். இதே போன்று பல விஷயங்கள் மாற்றப்பட வேண்டியுள்ளது.
இனி அரசியலுக்கு வருபவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்திருக்க வேண்டும்?
அது தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா?
அரசியலுக்கு திரையுலக பிரபலங்கள் வந்து நாசமாக்கி விட்டார்கள் என்று பல அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவருடைய ஆட்சி எப்படியிருந்தது?
அதெல்லாம் என்னை ஏன் கேட்கிறீர்கள். அதைப் பற்றி நிறைய சொல்லிவிட்டேன்.
உங்கள் நண்பர் ரஜினிக்கு ஆதரவோ, ஆலோசனையோ வழங்குவீர்களா?
அதை தனியாக வழங்குவேன்.
கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன?
அவரைப் பற்றி ஒரு குறும்படமே இயக்கி அனைவருக்கும் அனுப்பியுள்ளேன். கூடிய விரைவில் வந்துவிடும்.
எம்.ஜி.ஆருடைய நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. கலைத்துறை சார்பாகவோ, தமிழக அரசு சார்பாகவோ எந்தவிதமான கொண்டாட்டமோ, விழாவோ இல்லையே?
கொண்டாடும் அளவிற்கு இப்போது அவருடைய பிறந்த நாள் ஒன்றுதான் இருப்பதாக தோன்றுகிறது. வேறு எந்தவொரு கொண்டாடும் நிகழ்வும் இல்லை என்பது எனது கருத்து.