<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Wednesday, May 31, 2017

கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

நன்றி தீக்கதிர்


கேள்வி: இந்தியாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு முதல்வர்களில்நீங்கள் ஒருவர். திரிபுரா ஒரு மிகச் சிறிய மாநிலம். எனவே (ஆதரவாளர்கள் மட்டுமின்றி விமர்சகர்களும் கூட) உங்களது அரசாங்கம் மீது வலுவான கூர்மையான கவனம் செலுத்துகின்றனர். இது உங்கள் மீது கூடுதல் சுமையை உருவாக்குகிறதா?
பதில்: அப்படி எந்த ஒரு சுமையையும் நான்உணரவில்லை. எங்களது மக்கள் சேவையின் ஒரு பகுதியாகவே இதனை நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு பிரச்சனை குறித்தும் தெளிவான கொள்கைகள் எங்களிடம் உள்ளன. இந்த கொள்கைகளின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுகிறோம். எங்களை பொறுத்தவரை இது வழக்கமான செயல்பாடுதான்!
கேள்வி: கேரளாவின் இடதுசாரி அரசாங்கங்கள் முன்னோடி திட்டங்களுக்கு புகழ் பெற்றவை. நிலச்சீர்திருத்தங்கள், அனைவருக்கும் கல்வி, பொருளாதாரத் திட்டமிடலை மக்களிடம் இருந்து உருவாக்குதல், மக்கள் நலத்திட்டங்கள் என பலவற்றை குறிப்பிடலாம். உங்கள் அரசாங்கத்தின் முன்னோடி திட்டம் என்ன?
பதில்: இந்த அரசாங்கத்தின் இலக்கு என்பது எந்த ஒரு குறிப்பிட்டத் திட்டத்தின் மீதும்கூடுதல் அழுத்தம் என்பது அல்ல; மாறாககேரளாவின் ஒட்டு மொத்த சிறப்பான வளர்ச்சி என்பது தான் இலக்கு ஆகும். இந்த ஒட்டு மொத்த வளர்ச்சியை பெற்றிட பல துறைகளில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் ஒட்டு மொத்தமாக கேரளாவின் முகத் தோற்றத்தை மாற்றும். முந்தைய இடதுசாரி அரசாங்கங்கள் அமலாக்கிய திட்டங்கள் வரலாற்றில் இடம் பெற்றன. அதே போல தற்போதைய திட்டங்களும் வரலாற்றில் இடம் பெறும் எனும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
கேள்வி:: இன்னும் சிறிது குறிப்பாகச் சொல்ல முடியுமா?
பதில்: இந்த அரசாங்கம் முன்கையெடுக்கும் பல திட்டங்கள் பற்றிக் கூற முடியும். கேரளாசிறந்த கல்வி முறையை கொண்டுள்ளது. எனினும் மாநிலத்தின் பொதுக் கல்வி முறையில் சில பிரச்சனைகள் உள்ளன. இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதுதான் எங்களது முன்னுரிமை. அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம்வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பறைகளையும் இணையதளம் மூலமும் கணினி மூலமும் இணைத்து சீர்மிகு வகுப்பறைகளை ‘SMART CLASSES’ உருவாக்குவது எங்களது திட்டம். இத்திட்டம் அமலான பிறகு உலகில் உள்ளதலை சிறந்த பள்ளியில் உள்ள அதே வசதிகளை பொது பள்ளியில் படிக்கும் கேரளா மாணவன் பெறுவார்.
மருத்துவத் துறையிலும் இத்தகைய மாற்றங்கள் உருவாகும் என நம்புகிறோம். முதலில் குடும்ப மருத்துவர்கள் கொண்ட ஒரு முறையை உருவாக்குவது என்பது திட்டம். நவீன உயர்தர சிறப்புச் சிகிச்சைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளன. இத்தகைய சிறப்பான உயர் சிகிச்சைகள் மாவட்டஅளவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மக்களுக்கு தருவதற்கு திட்டம் இயற்றி அமலாக்க முனைந்து வருகிறோம். மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை தரும் வகையில்அடிப்படையில் பல மாற்றங்களை உருவாக்கும் பொருட்டு ‘ஆர்த்ரம்’ (Aardhram) சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதே போல(Life) லைஃப் எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இது Livlihood(வாழ்வாதாரம்), Inclusion(சமூக வளர்ச்சியில் இணைத்தல்),Financial Empowerment (நிதி ஆதாரம்) திட்டம் ஆகும். இதன் மூலம் கேரளாவில் வீடு இல்லாதவர்கள் எவருமே இல்லை எனும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு ஆகும்.
கேள்வி: கேரளா கல்வியிலும் உடல் ஆரோக்கியப் பிரிவிலும் ஏற்கெனவே சிறப்பாக உள்ளது. ஆனால் விவசாயத்தை பற்றி நிலைமை என்ன? உணவு பொருட்களுக்கும் காய்கறிகளுக்கும் கேரளா ஏனைய மாநிலங்களையே மிகவும் சார்ந்திருக்கும் நிலை உள்ளதே?
பதில்: இப்பிரச்சனை குறித்து நாங்கள் உணர்ந்துள்ளோம். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது குடிமக்களின் உரிமை. எனவேதான் இயற்கை விவசாயத்தை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். கேரளாவின் விவசாயத் துறையை இயற்கை விவசாயம் மூலம் அடிப்படையிலேயே மாற்றுவதுதான் எங்களது நோக்கம் ஆகும். காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். விவசாயத்திற்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் தற்பொழுது தரிசாக உள்ள நிலங்களையும் விளை நிலங்களாக மாற்ற நாங்கள் முனைகிறோம்.
கேள்வி: கேரளாவின் பொருளாதாரம் குறித்தும் கவலை தெரிவிக்கப்படுகிறது. வேலையின்மை அதிக அளவில் உள்ளது. கேரளாவில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. பிரச்சாரத்தின் பொழுது இலட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கப் போவதாக நீங்கள் கூறினீர்கள். பொருளாதரத்தை சீர்செய்ய உங்களது திட்டம் என்ன?
பதில்: வளங்கள் மிகுதியாக உள்ள மாநிலம் அல்ல கேரளா. இது ஒரு மிகப்பெரிய சவால்ஆகும். வலுவான வளங்கள் இருந்தால்தான் தொழில்கள் வளரும். இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க ‘கேரளா உள்கட்டமைப்பு முதலீடு நிதியகம்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த அமைப்பின் மூலம் ரூ. 50,000 கோடி திரட்டி உள்கட்டமைப்புப் பணிகளைச் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
கேள்வி: ஆனால் தொழில்கள் கேரளாவிற்கு வருமா? தொழில் நடத்த உகந்த மாநிலமாக கேரளா இல்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர். தீவிர தொழிற்சங்க சூழல் முதலீட்டாளர்களை அண்டவிடுவது இல்லை.....
பதில்: இந்தக் கூற்று உண்மை அல்ல. இத்தகைய தொழிற்சங்க செயல்பாடுகள் காரணமாக எந்த ஒரு தொழிலாவது கேரளாவில் மூடப்பட்டு உள்ளதா? இங்கு செயல்படும் எந்த ஒரு தொழில் குழுமமாவது தொழிற்சங்கங்கள் காரணமாக நாங்கள் தொழிலை நடத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்களா? கேரளா குறித்து பல அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அதில் இதுவும் ஒன்று. கேரளாவில்தொழில் வளத்தைப் பெருக்கிட நாங்கள் புதிய தொழில் கொள்கையை அறிவிக்க உள்ளோம். தொழிலை உகந்தமுறையில் செய்வதற்கான சூழலை உருவாக்குவதே எங்களது அணுகுமுறை. தொழில்கள் தொடங்கிட கேரளா ஒரு சிறந்த மாநிலமாக உருவாகும்.
கேள்வி:: உங்கள் கட்சி பாஜக குறித்தும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்தும்கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது. நடுவண் அரசுடன் உங்களது உறவு எப்படி உள்ளது?
பதில்:இது இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது. மோடியின் தலைமையில் செயல்படும் நடுவண் அரசாங்கத்தின் கொள்கைகளில் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதே சமயத்தில் மாநிலத்திற்கு நடுவண் அரசுடன் சிலபிரச்சனைகளும் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு (பணமதிப்பு நீக்கம் காரணமாக) கேரளா சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்க கேரளாவின் அனைத்து கட்சிகளும் எனது தலைமையில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால் எங்களுக்கு நேரம்ஒதுக்கப்படவில்லை. பொதுவாக பிரதமர்கள் ஒரு மாநில முதல்வரின் தலைமையில் வரும் குழுவை சந்திப்பதில் இப்படி தவறான நிலைபாடுகள் எடுப்பதில்லை. இத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும் கேரள மாநில அரசாங்கத்திற்கும் நடுவண்அரசாங்கத்திற்கும் இரண்டு அரசாங்க அமைப்புகள் என்ற முறையில் உறவு சீராகவே உள்ளது. உதாரணத்திற்கு நாங்கள் பதவி ஏற்றவுடன் 2016இல் தில்லிக்குச் சென்றோம். பல தலைவர்களை சந்தித்தோம். பிரதமரையும் சந்தித்தோம். அப்பொழுது பிரதமர் கேரளாவில் ஆயுர்வேதத்திற்காக ஒரு நிறுவனத்தை தொடங்க முடியுமா என்று கேட்டார். அதற்காக நடுவண் அரசு உதவ முடியும் எனவும் சொன்னார். இப்பொழுது உலக தரம் வாய்ந்த ஆயுர்வேத நிறுவனத்தை தொடங்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். நாங்கள் வேறு சில ஆலோசனைகளையும் முன்வைத்தோம். அவற்றை நடுவண் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. எனவே மத்திய, மாநில உறவுகள் சீராகவே உள்ளனஎன கூறலாம்.
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் என்ற முறையில் பாஜகவின் வளர்ச்சி பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? பாஜக மத்தியில் பெரும்பான்மையுடன் உள்ளது. மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது...
பதில்: இப்பொழுதுள்ள அரசியல் சூழலை நீங்கள் நோக்கினால் நாம் ஒரு ஆபத்தான கட்டத்தில் இருந்து வருகிறோம் என்பதை உணர்வீர்கள். மற்ற கட்சிகளிடமிருந்து பாஜக எப்படி வேறுபடுகிறது எனில் பாஜகஆர்.எஸ்.எஸ் எனும் அமைப்பின் பிடிக்குள் உள்ளது. அதனால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்தான் முக்கிய முடிவுகளை நேரடியாக தீர்மானிக்கிறது என்பது தெளிவு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் இந்தியாவின் நலனுக்கு உகந்தது அல்ல. ஆர்.எஸ்.எஸ் மதச்சார்பின்மையை ஏற்றுகொள்வது இல்லை. ஒரு பன்முகத்தன்மை உள்ள நமது தேசத்திற்கு இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய அரசியல் சட்டத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு எதிராக ஒரு வலுவான எதிர்ப்பு இயக்கம் உருவாக்குவது அவசியம் ஆகும். ஆனால் அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சி தேசம் முழுவதும் செயல்படுகிறது என்றாலும் பாஜகவிற்கு எதிராக ஒரு வலுவான எதிர்ப்பை உருவாக்கும் வலுவை இழந்துள்ளது. பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைவதை நாம் பார்க்கிறோம். தேசியத் தலைவர்களும் மாநிலத் தலைவர்களும் ஏன் முன்னாள் காங்கிரஸ் முதல்வர்களும் கூட பாஜகவில் இணைகின்றனர். எனவேபாஜகவிற்கு எதிரான இந்த போராட்டத்தில் காங்கிரசை முழுமையாக நம்புவது பொருத்தமானது அல்ல. காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டுமேவலதுசாரி (பொருளாதாரக்) கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம் கொள்கைகளை அமல்படுத்துவதில் காங்கிரஸ் முன்னணியில் இருந்தது. பாஜக அதே பொருளாதாரக் கொள்கைகளைதான் பின்பற்றுகிறது. பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்த வரை காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. எனவேதான் காங்கிரசை ஒரு பெரிய எதிரியாக பாஜக பார்ப்பது இல்லை. பாஜகவிற்கு பெரிய எதிரி இடதுசாரிகள்தான்! இன்றையை சூழலில் இடதுசாரிகள் இந்திய அளவில் வலுவாக இல்லை. இருப்பினும் பா.ஜ.க.விற்கு இடதுசாரிகளை பார்த்து தான் பயம் உருவாகிறது. இதனை இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள கேரளாவிலும் திரிபுராவிலும் நீங்கள் பார்க்க முடியும்.
கேள்வி: கேரளாவிலும் பா.ஜ.க. வளர்கிறது.அரசியல் ரீதியாக அது தீண்டப்படாத கட்சியாக இல்லை. கேரளாவில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் பாஜகவிற்கு உள்ளார்.அதன் வாக்கு விகிதமும் அதிகரித்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு இணையாக ஊடகங்களும் பாஜகவிற்கு முக்கியத்துவம் தருகின்றன.
பதில்: கேரளாவில் அனைத்துவிதமான அரசியல் நாடகங்களையும் பாஜக அரங்கேற்றி வருகிறது. எனினும் பொது ஆதரவு பெற இயலவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் (நேமம்/திருவனந்தபுரம்) காங்கிரசின் உதவியுடன் வென்றது. காங்கிரஸ் தனதுவாக்குகளை பாஜகவிற்கு தந்து அதற்கு பிரதிபலனாக வேறு இடங்களில் பாஜகவின் வாக்குகளைப் பெற்றது. ஆனால் பாஜக தனது வலுவைவிட அதிகமாக ஊடகங்களின் ஆதரவை பெறுகிறது என்பது உண்மைதான்! மத்தியில் அது ஆட்சியில் உள்ளது என்பது காரணமாக இருக்கலாம். அதனாலேயே இங்கு பாஜக வளர்கிறது என்று கூற முடியாது.
கேள்வி: மாநில மற்றும் மத்திய பாஜக தலைமை இரண்டுமே கேரளாவில் அதன்ஊழியர்களை உங்களது கட்சி தாக்குகிறது என்று குற்றம் சாட்டுகிறது. உங்கள்அரசாங்கம் பதவியில் அமர்ந்த பிறகுஆர்.எஸ்.எஸ். மற்றும் உங்கள் கட்சியைசார்ந்த பல ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சுழற்சியை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?
பதில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழித்திட பல வழிகளில் ஆர்.எஸ்.எஸ். முயன்றுள்ளது. அதில் ஒன்று நேரடிகொலை வெறித் தாக்குதல் ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பே இத்தகையதாக்குதல்கள் கட்சி மீது ஆரம்பித்துவிட்டன. சம்பந்தப்பட்ட அமைப்புகளை பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை நாம் உத்தரவாதம் செய்தோம். அதன் பின்னர் நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதற்கு பின்னரும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும் பேச்சுவார்த்தைகள் மூலம் இதற்கு தீர்வு காண்பதை தொடர்வது என திட்டமிட்டுள்ளோம்.
கேள்வி: தேசிய அளவில் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் உங்களது பலம்சுருங்கி வருவது உங்களுக்கு வேதனையை தருகிறதா?
பதில்: கட்சியின் தளத்தை சீரமைத்திட ஒவ்வொரு மாநிலக் கிளையும் முயன்று வருகின்றன. எங்களுக்கு பெரிய பின்னடைவு என்பது மேற்கு வங்கத்தில் ஏற்பட்டது. ஆனால் மேற்குவங்கக் கிளைஇந்த சவாலை எதிர்கொள்ள தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அது நல்ல தாக்கத்தையும் உருவாக்கியுள்ளது. மற்ற மாநிலங்களில் எங்களது கட்சி சிறிய அமைப்பாகவே உள்ளது. ஆனால் சில இடங்களில் கட்சி அமைத்தகூட்டணிகள் எங்களை பலவீனப்படுத்தியுள்ளது. எங்களது தவறை உணந்துள்ளோம். எங்களது சுயேச்சையான வலுவை அதிகரித்திட முயன்று வருகிறோம். எனினும் தேசிய அளவில் எங்களது வலு எப்படி இருந்தாலும் இடதுசாரிகள் மட்டும்தான் மதவெறி சக்திகளுக்கு எதிராக வலுவாக (அரசியல்,தத்துவார்த்த மற்றும் கலாச்சார) களத்தில் போரிட இயலும். எனவேதான் பாஜக மற்றும் ஏனைய வலதுசாரிக் கட்சிகள் இடதுசாரிகளை தாக்குவது என்பது தொடர்கிறது.
நன்றி : இந்து 31.05.2017 (இந்து நிருபர்ஸ்டான்லி ஜானி அவர்களுக்கு அளித்த பேட்டி)
தமிழில்: அ.அன்வர் உசேன்

பினராயி விஜயன் அதிரடி

மாட்டிறைச்சி விவகாரத்தை விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்


சென்னை, மே 31 -
மாட்டிறைச்சி தொடர்பான விவகாரத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மோடி அரசுக்கு ஆரம்பம் முதற்கொண்டே மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.அசைவம் உண்ணும் பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையில் கைவைக்கும் பாஜக அரசின் இந்துத்துவா நடவடிக்கை ஏற்க முடியாது என்று அறிவித்துள்ள அவர், இப்பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக மாநில முதல்வர்களின் கருத்தையும் திரட்டி வருகிறார்.
இந்நிலையில், புதனன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், மாடு விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு உரிமையில்லை என்றும், இவ்விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
“மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தக் கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை; அதே போன்று இறைச்சிக்காக மாடு வெட்டுவதை முறைப்படுத்தும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு இல்லை; மத்திய அரசின் ஒழுங்குபடுத்தும் விதிகள் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்; உணவிற்காக கால்நடைகளை வெட்டுவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டது; ஆனால், மத்திய அரசின் உத்தரவு விலங்குகள் வதைத் தடை சட்டத்திற்கு எதிரானது; மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது; அதற்கு பாஜக-விற்கு உரிமை இல்லை.” என்று கூறியுள்ள பினராயி விஜயன், “இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

பெருமாநல்லூர், அவிநாசியில் மதுக்கடையை மூடக்கோரி போராட்டம்

நன்றி தீக்கதிர்

பெருமாநல்லூர்,அவிநாசி
அவிநாசி, மே 31-
பெருமாநல்லூர், அவிநாசி பகுதிகளில் மக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருமாநல்லூரில் இரண்டு இடங்களில் மாநில நெடுஞ்சாலைக்கு மிக அருகில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பையும் மீறி சில தினங்களுக்கு முன் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. இதனால் அய்யம்பாளையம், பாரதியார் காலனி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த இரு கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பெருமாநல்லூர் பகுதியில் எந்த இடத்திலும் மதுபானக் கடை அமைக்கக் கூடாது எனக்கோரி அனைத்துக் கட்சி, பொது நல அமைப்பு, பொதுமக்கள் சார்பில் பெருமாநல்லூர் நான்கு வழிசாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறம் குப்பை கிடங்கு மற்றும் அவிநாசி - மங்கலம் சாலை இணைக்கும் சாலையில் அருகருகே அண்மையில் இரு மதுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஆகவே, இந்த இரு கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Monday, May 29, 2017

அப்படி என்ன சாதித்துவிட்டது பினராயி அரசு?நன்றி = தீக்கதிர்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகிறார்.
திருவனந்தபுரம், மே 26-

பினராயி விஜயனின் ஓராண்டு கால ஆட்சியை பாராட்டாத ஊடகங்களே இல்லை என்ற அளவிற்குமிகப்பெரும் சாதனைகளை படைத்து முதலாண்டு நிறைவு விழாவை கொண்டாடி இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு.இது இடதுசாரிகளின் ஆட்சி; நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான ஆட்சி;
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பின்பற்றி வரும் தீவிர மதவெறி - அதிதீவிர தாராள மயம் ஆகிய இரண்டு தீமைகளுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டே நாடே வியக்கும் சாதனைகளை படைத்து நிற்கிறது இந்த இடதுசாரிகளின் ஆட்சி.இதை கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல; கம்யூனி ஸ்ட்டுகளின் எதிரிகளாகவே ஊடக உலகில் செயல்படுகிற பல ஏடுகள் எழுதி இருக்கின்றன.
கேரளத்தில் மாத்ருபூமியும், மலையாள மனோரமாவும் மற்றவர்களின் விமர்சனங்களை பிரதிபலித்தாலும் பினராயி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பாராட்டியிருக்கின்றன. வணிகத்துறையில் முக்கியமான ஏடுகளில் ஒன்றாக கருதப்படும் ‘லைவ் மின்ட்’ ஆங்கில ஏடு, பினராயி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு ‘‘இந்தியா வின் முன் மாதிரி அரசு கேரளத்தின் இடதுசாரி அரசே’’ என புகழ் மாலை சூட்டியிருக்கிறது.அப்படி என்ன கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு சாதித்துவிட்டது என்பதையும் ‘லைவ் மின்ட்’ ஏடு பட்டியலிட்டிருக்கிறது.
குறிப்பாக பினராயி அரசின் ஒன்பது நடவடிக்கைகள் - சிறியதுபோல தெரிந்தாலும் - இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் மேற்கொண்டிராத - சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிற முக்கியமான நடவடிக்கைகள் என குறிப்பிட்டிருக்கிறது.
பினராயி அரசு பதவியேற்றவுடன் முதல் பட்ஜெட்டில் முதல் அறிவிப்பாக பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு வகைகள் மீது "கொழுப்பு வரி" விதித்தது. இந்தியாவில் யாரும் செய்யத் துணியாத காரியம் இது. கேரள மக்களின் - கேரளத்துக் குழந்தைகளின் சுகாதாரத்தை - உடல்நலனை பிரதானப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை எளியது போலத் தெரிந்தாலும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நடவடிக்கை. உள்நாட்டுத் தயாரிப்புகள் மீது கவனத்தை திருப்ப வைத்த நடவடிக்கை என மின்ட் ஏடு சுட்டிக்காட்டியுள்ளது.
கேரளம் முழுவதும் ஆயிரம் இடங்களைத் தேர்வு செய்து அந்தப் பகுதி முழுவதும் இலவச வைபை மண்டலமாக அறிவித்து செயல்படுத்தியது. அது மட்டுமின்றி, சுமார் 20 லட்சம் ஏழை- நடுத்தர குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்காக தனது முதல் பட்ஜெட்டில் ரூபாய் ஆயிரம் கோடியை ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்தியது. இந்தியாவில் பணபலம் மிக்க மாநிலங்களில் கூட இது சாத்தியமாகவில்லை. ஆனால், "இணைய தள சேவை என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை" என்று இடது ஜனநாயக முன்னணி அரசின் நிதியமைச்சரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் குறிப்பிட்டதை அப்படியே செயல்படுத்தியிருக்கிறது பினராயி அரசு.
இவற்றைவிட மிக முக்கியமான மூன்றாவது நடவடிக்கை ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்னுதாரணம். தமிழகம் உட்பட எந்த மாநிலத்திலும் பிற மாநிலங்களிலிருந்து வந்து குறைந்த கூலிக்கு வேலைசெய்து பிழைப்பு நடத்தும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த வசதிகளும் இல்லை. கேரளத்தில் இதை மாற்றிக் காட்டியது பினராயி அரசு. பிற மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து கேரளத்தில் பல்வேறு துறைகளில் முறைசாராத் தொழிலாளர்களாக கிட்டத்தட்ட 34 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை 2016 ஜூலை முதல் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.
திருநங்கைகளுக்கு "திருநங்கை " என்று பெயர் வைத்ததோடு தமிழகம் தனது கடமையை முடித்துக் கொண்டது. ஆனால் திருநங்கைகளுக்கு அரசுத் துறையில் பெரிய அளவில் இடஒதுக்கீடு செய்து பணிவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து செயல்படுத்தியிருக்கிறது பினராயி அரசு. கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டமாக 60 திருநங்கைகள் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றில் திருநங்கைகள் அதிகாரப்பூர்வமாக வேலைக்கு எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது தவிர, 2017 பட்ஜெட்டில் திருநங்கைகளுக்கு என ரூ.10 கோடியை ஒதுக்கி, கேரளம் முழுவதும் உள்ள வயது முதிர்ந்த திருநங்கைகள் அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கியிருக்கிறது. கடந்த ஏப்ரலில் திருநங்கைகளுக்கு என பிரத்யேகமாக ஒரு விளையாட்டு விழாவையும் நடத்தியிருக்கிறது. இதுவும் இந்தியாவிலேயே முதல் நடவடிக்கை ஆகும்.
ஊடகங்கள் பெரிய அளவிற்கு வெளியிடாத அதி முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை, கேரளத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இளம்பெண் குழந்தைகளுக்கு சானிடரி நாப்கின் இலவசமாக வழங்கும் திட்டம். இதை நடப்பு கல்வி ஆண்டு முதல் பினராயி அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இதற்காக ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளம்பெண் குழந்தைகளின் சுகாதாரம் என்பது அவர்களது அடிப்படை உரிமை; சானிடரி நாப்கின் வாங்க முடியாமல் பல பெண் குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதை தடுப்பதும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உணரச் செய்வதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என கடந்த மே 17 அன்று பினராயி விஜயன் தனது முகநூல் பக்கம் வழியாக அறிவிப்பு வெளியிட்டார். "ஸி பேடு" (She Pad) என அமலுக்கு வரும் இந்த திட்டம் கேரள மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்; ஆனால் அறிவிப்போடு அது நின்றுவிட்டது. கேரளத்தில் அது அமலாகிறது.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு என்று இந்தியாவில் எங்குமே சிறப்புப் பாடப் புத்தகங்கள் இல்லை. கேரள கல்வித்துறை இந்த கல்வி ஆண்டு முதல் இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கிறது. தலைசிறந்த கல்வியாளர்கள், மனநல வல்லுநர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் ஆலோசனைகளுடன் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பிரத்யேக பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 24 வகையிலான உடல் ஊனம் மற்றும் மனநல பாதிப்பு அடைந்த குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்படியெல்லாம் ஒரு முயற்சி கூட எந்த மாநிலமும் இதுவரை எடுத்ததில்லை.
அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போன்று அதிரடியான மற்றொரு திட்டத்தை கடந்த ஏப்ரலில் பினராயி அரசு அமலுக்கு கொண்டு வந்தது. ரூ. 6 லட்சமும் அதற்கு குறைவாகவும் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ள அனைத்து கல்விக் கடன்களையும் அரசாங்கமே செலுத்தும் என்பது தான் அந்த அறிவிப்பு. இதற்காக 900 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்தது பினராயி அரசு. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கல்விக்கடனுக்காக வங்கிகள், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களிடமும் வசூலிக்கும் பொறுப்பைக் கொடுத்து கந்துவட்டிக்காரர்களைவிட கொடூரமான முறையில் மாணவர்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிற நிலையில், ஏழை- நடுத்தரக் குடும்பத்து மாணவர்களைத் தனது கரங்களில் தாங்கிப் பாதுகாக்கும் இந்த மகத்தான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது இடது ஜனநாயக முன்னணி அரசு.
மே 29 அன்று கோழிக்கோட்டில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நாட்டிலேயே முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி செய்து கொடுத்த மாநிலமாக கேரளத்தை அறிவிக்க இருக்கிறார் முதலமைச்சர் பினராயி விஜயன். கடைசியாக எஞ்சியிருந்த 1.30லட்சம் வீடுகளும் கடந்த ஏப்ரல் 1ஆம்தேதி கணக்கீட்டின்படி முழுமையாக மின் வசதி செய்து தரப்பட்டுள்ளன.
இவற்றில் 40 ஆயிரம் வீடுகள் தாழ்த்தப்பட்ட மக்களுடையவை; 20 ஆயிரம் வீடுகள் பழங்குடி மக்களுடையவை. இத்திட்டத்திற்காக ரூ. 124 கோடி ஒதுக்கீடு செய்து முழுமையாக செலவிடப்பட்டிருக்கிறது. உண்மையில், கேரளா நீண்ட பல்லாண்டுகளுக்கு முன்பாகவே முழுமையான மின்மயமாக்கப்பட்ட மாநிலமாகிவிட்டது என்ற போதிலும் முழுமையான மின்மயம் ஆக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்படுவதற்கான மத்திய அரசின் மிக நுணுக்கமான விதிமுறைகளை செயல்படுத்தாமல் இருந்தது. அதாவது ஒரு சிறு குடிசை கூட விடுபடக்கூடாது என்ற அந்த விதியை பினராயி அரசு தற்போது பூர்த்தி செய்து கேரளத்தை ஜொலிக்க வைத்திருக்கிறது.
இந்தியாவின் நூறு சதவீத முழுமையான சுகாதாரம் அடைந்த மாநிலமாக மாறும் மிகப்பெரும் நோக்கத்துடன் கடந்த நவம்பர் மாதத்தில் பினராயி அரசு கேரளத்தை பொதுவெளியில் மனிதக்கழிவுகள் இல்லாத மாநிலமாக அறிவித்தது. கடந்த ஒரே ஆண்டில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவிட்டு மாநிலம் முழுவதும் 2லட்சம் புதிய கழிப்பறைகளை கட்டி முடித்திருக்கிறது. இந்தியாவின் மிக அதிக மக்கள்தொகை உள்ள மாநிலங்களில் இதை சாதித்துக் காட்டியிருக்கிற முதல் மாநிலம் கேரளமே. ஏற்கெனவே சிக்கிம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை இதை சாதித்திருந்தாலும் அவை சிறிய மாநிலங்கள். மக்கள் தொகையும் மிகக் குறைவு.
- இந்த ஒன்பது சாதனைகளையும் ‘லைவ் மின்ட்’ஏடு விரிவாகப் பட்டியலிட்டு விளக்கியிருக்கிறது. இவற்றுடன் இன்னும் பல்வேறு சாதனைகளைப் புரிந்த பெருமிதத்துடன் மே 25 வியாழனன்று திருவனந்தபுரத்தில் தனது முதலாமாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது இடது ஜனநாயக முன்னணி அரசு.அந்த விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளத்தின் மலைப்பகுதி மற்றும் கடலோரப் பகுதி நெடுஞ்சாலைகளை மிக விரைவாக மேம்படுத்துவதே அடுத்த உடனடி நடவடிக்கை என அறிவித்தார்.திருவனந்தபுரத்தில் உள்ள நிஷா காந்தி திறந்தவெளி கலையரங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அந்த எழுச்சிமிகு விழாவில்உரையாற்றிய பினராயி, ஓராண்டு காலத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு நிறைவேற்றியுள்ள காரியங்கள் கேரளத்தின் எதிர்க்கட்சிகளை தூங்கவிடாமல் செய்திருக்கின்றன எனக்குறிப் பிட்டார்.
கேரளத்து மக்கள், வெளிநாடு வாழ் கேரளமக்கள் மற்றும் அரசியல் வேறுபாடுகள் மறந்து அரசாங்கத்தின் நல்ல நடவடிக்கைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அனைத்துத் தரப்பு மக்களும் தமது அரசின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.நாடே போற்றும் சாதனைகளுடன் தனது ஓராண்டை பினராயி அரசு நிறைவுசெய்த தருணத்தில், அரசுக்கு எதிராக ஏதேனும் போராட்டம்நடத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் காங்கிரசும், பாஜகவும் சில இடங்களில் ஊர்வலங் களை நடத்தின. எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும், பினராயி அரசாங்கம் நன்றாக செயல்படவில்லை என்று விமர்சித்தனர். ஆனால் அவர்களால் பினராயி அரசின் செயல்பாடின்மை குறித்துப் பட்டியலிட முடியவில்லை.

மோடி ஆட்சியில் இந்த மூன்றுதான் நன்றாக நடக்கிறது! மூன்றாண்டு ஆட்சியை விமர்சிக்கும் ஜி.ராமகிருஷ்ணன்

ஜி.ராமாகிருஷ்ணன்

இந்திய நாடு இதுவரையிலும் கண்டிராத ஒரு சீரழிவை நோக்கி இந்தியாவை இழுத்துச் செல்கிற மிக மோசமான அரசு என்ற இழுக்கை மோடியின் கடந்த மூன்றாண்டு கால அரசு உருவாக்கியிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. மூன்றாண்டுகள் முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைவதா, இனியும் இரண்டாண்டுகள் இருக்கின்றதே அச்சம் கொள்வதா என எண்ணும் அளவுக்குத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் இருந்து கொண்டிருக்கிறது. விவசாய வளர்ச்சி விகிதம் இந்த மூன்றாண்டுகளில் சராசரி 1.7 சதவிகிதம் அளவுக்கே உள்ளது. இதோடு கூட கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கான ஒதுக்கீடுகளை குறைப்பதும், உரிய காலத்தில் மாநில அரசுகளுக்கு இதற்கான நிதியை மறுப்பதும், கிராமப்புற பொருளாதாரத்தை மேலும் கடுமையானதாகவும், துயரமிக்கதாகவும் மாற்றியிருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலையளிப்போம் என்றெல்லாம் பேசினார்கள்.  ஆனால் கடந்த ஆண்டு வெறும் 2 லட்சத்து 31 ஆயிரம் வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டிருக்கின்றன. புதிய முதலீடுகள் இல்லை, அரசு புதிய தொழில்களை துவங்கவில்லை, ரியல் எஸ்டேட் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது, ஏற்றுமதி குறைந்து வருவதில் உற்பத்தி துறையில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தொழிற்துறையிலும், வேலைவாய்ப்புத்துறையிலும் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியையும், சரிவுகளையும் மோடி அரசாங்கம் திணித்து இருக்கிறது.

பல மாநிலங்களில் சிறப்பாக இருந்த பொதுவிநியோக முறை முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 50 சதவிகிதம் பேருக்கு ரேசன் பொருள்கள் கிடைக்காது என்கிற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். ரேசனில் கொடுக்கப்படும் மண்எண்ணெய்யையும், சர்க்கரையையும் ரத்து செய்ய முயல்கிறார்கள். எதிர்கட்சியாக இருந்தபோது ஆதார் ஒரு ஆபத்து என்று கூறியவர்கள் இப்போது அதை கட்டாயமாக்கி பலருக்கு ரேசன் பொருள்கள் கிடைக்காமல் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 13 லட்சம் கார்டுகளுக்கு ரேசன் நிறுத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வரும்பொழுது 399 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயுவின் விலை தற்போது 732 ரூபாயாக ஏறத்தாழ ஒரு மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. நாட்டின் முதுகெலும்பாக திகழ்ந்து கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கங்கனம் கட்டி செயல்படுகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையும், தனியார்மயமாக்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு, இந்தி திணிப்பு, கீழடி அகழாய்வுக்குத் தடை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, வர்தா புயல், வறட்சி நிவாரணத்தில் வஞ்சகம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடுவது, தமிழகத்துக்கான ரேசன் பொருள்கள் வெட்டி குறைப்பு என மாநில உரிமைகளின் மீது அடிமேல் அடியாக தமிழக மக்களை வஞ்சிக்கிறார்கள். கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் முறையில் அருணாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட்டில் ஆளுநர்களை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்த்தார்கள். டெல்லியிலும், பாண்டிச்சேரியிலும், தமிழகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளை, அரசுகளை முடக்குவதற்கும், ஊனமாக்குவதற்கும், சிதைப்பதற்கும் ஜனநாயகத்துக்கு புறம்பாக ஆளுநர்களை பயன்படுத்துகிறார்கள். இவற்றில் இருந்து எல்லாம் மக்களின் கோபத்தை திசை திருப்பவும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்கும் பசு மாட்டு அரசியலை முன்வைக்கிறார்கள். ஆளுங்கட்சியின் ஆதரவோடு பசுகாவலர்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் கொலையாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் கருத்து சுதந்திரம், மனித உரிமைகள், எழுத்துச் சுதந்திரம், ஊடக உரிமை இவையெல்லாம் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோர் ஆளுங்கட்சியின் சகோதர அமைப்புகளால் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மிகக் கடுமையாக மிரட்டப்படுகின்றனர். மோடி ஆட்சியின் இருள் சூழ்ந்த ஆயிரம் நாட்கள்
இப்படித்தான் இவர்களது முன்னோர் வாஜ்பாய் காலத்தில் இந்தியா ஒளிர்கிறது என்று தம்பட்டம் அடித்தார்கள். இருண்டு கொண்டிருந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் தேர்தல் நேரத்தில் அந்த அரசாங்கத்தை ஒழிப்பதுதான் இந்தியாவை ஒளியூட்ட ஒரே வழி என்று முடிவுக்கு வந்தார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும்,இன்னும் 700 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று 3 வருடங்கள் முடிந்துவிட்டன. ஆயிரம் நாட்கள் கடந்து விட்டது.நாட்களை சொல்வதற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. அமெரிக்க குடிமக்கள் ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்து விட்டு, 70 நாட்களே முடிந்த நிலையில் இவருடைய பதவிக்காலம் சீக்கிரம் முடிய வேண்டுமே என்றுகையைப் பிசைந்து கொண்டிருப்பதைப் போலவே இந்திய மக்களும் இருக்கிறார்கள். இதேபோன்ற பேச்சுக்களை பிரதமர் வேட்பாளராக இருந்த போதே நரேந்திர மோடி பேசினார். அலெக்சாண்டர் கங்கை நதிக்கரையில் தோற்கடிக்கப்பட்டார். திருச்சியிலிருந்து வஉசி வேதாரண்யத்திற்கு உப்பு காய்ச்ச சென்றார். பெண்களை அதிகாரப்படுத்துவதில் குஜராத் முன்னணியில் இருக்கிறது. சியாமா பிரசாத் முகர்ஜியின் அஸ்தியை நான்தான் எடுத்து வந்தேன்.
பட்டேலின் இறுதி நிகழ்ச்சியில் ஜவஹர்லால் நேரு கலந்து கொள்ளவில்லை என்றெல்லாம் தப்பும் தவறுமாக எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக, பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். இந்திய இடதுசாரிகளும், அறிவுசார் சமூகமும் நரேந்திரமோடி இந்திய அரசியலில் மிகப்பெரிய பேரழிவை உருவாக்கக்கூடும் என்றே எச்சரித்தார்கள். ஆயினும் கூட, முந்தைய ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசு மீதிருந்த கோபம், நரேந்திர மோடியின் வாக்கு சாதுர்யம், இந்திய பெருமுதலாளிகளின் அரவணைப்பு, கார்ப்பரேட் ஊடகங்களின் ஜால்ரா சத்தம், ஆர்எஸ்எஸ் என்கிற பாஜகவின் தாய் அமைப்பின் தந்திரங்கள், இவை அனைத்துமாக நரேந்திர மோடியை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி விட்டன. தேர்தல் ஆரம்பித்த பிறகு, ஒருவாரம் கழித்துதான் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அதுமட்டுமன்றி, பிரச்சார பொதுக்கூட்டங்களிலும் தேர்தல் அறிக்கையிலும் பாரதிய ஜனதா கட்சி பலவாக்குறுதிகளை அள்ளி வீசியது. அமைதியும்,நிம்மதியும், வளமும் இந்திய நாட்டில் கோலோச்சும் என்பது போலவும், எல்லோரும் எல்லாமும் பெற்ற நாடாக மாறி விடும் என்பதுபோலவும், அவர் வெற்றி பெற்று விட்டால் அண்டை நாடுகள் எல்லாம் இந்தியாவை கண்டு அஞ்சி நடக்கும் என்றும் உலக நாடுகளே கூட நரேந்திர மோடி மகுடாபிசேகம் செய்து கொள்ள இருப்பதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது போலவும் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன.
சொல்வார் செய்யமாட்டார்
வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் மீட்டெடுத்து ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக சொன்னார். லோக் பால் சட்டத்தை கொண்டு வந்து இந்தியாவில் ஊழலை ஒழித்து விடப்போவதாக சபதம் செய்தார். விளைபொருளுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவேன், அதன் மூலம் தற்கொலைகளை தடுத்து நிறுத்தி விடுவேன்என்று தம்பட்டம் அடித்தார். அனைவருக்குமான பொதுவிநியோக முறையை அமல்படுத்துவேன், சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோலிய பொருட்களின் விலை தானாக குறையும்வகையில் விலை நிர்ணயத்தை அரசு கைவிடுகிறது . இதன் மூலம் விலை குறைப்புஏற்படும் போதெல்லாம் பெட்ரோலியப்பொருட்களை பயன்படுத்துவோர் பயன் பெறுவார்கள்.
குறைந்த அரசாங்கம் கூடுதலானசேவை, பொதுத்துறைகளை வலுப்படுத்துவோம், ஆதார் அவசியமற்றது, அட்டூழியமானது, தாவுத் இப்ராஹிமை புறங்கையை கட்டிஇழுத்து வரமுடியாதா? நீதிபதிகளின் பணிஇடங்கள் காலியாக இருப்பதை நாங்கள் வந்தால் நிரப்பி விடுவோம் என்றெல்லாம் அவர்ஆவேசமாக பேசினார். ஆனால், 3 ஆண்டுகள்கழித்து விட்டபிறகு, இவையெல்லாம் யாரோ கொடுத்த வாக்குறுதி போலவும், தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போலவும் ஊர் சுற்றி திரிகிறார்.
நரேந்திர மோடி வாக்குகளைப் பெறுவதற்காக பேசி விட்டு, இப்போது பம்மித்திரியும் அவரது உத்தரவாதங்கள். கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்பது திருக்குறள். ஒரு சொல் திறம்பினாலே கற்பு கெட்டவன் என்கிறது இந்த மூத்தோர் சொல். சொன்ன சொல் ஒவ்வொன்றையும் காப்பாற்ற முயற்சி எடுக்காத அல்லது கண்டு கொள்ளாத மோடிக்கு இந்த தமிழ் வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் என்ன பெயர் வைப்பார்கள் என்று தெரியவில்லை.
பொய் விதைத்து துயரம் அறுவடை செய்பவர்
தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர் பலரோடு டீ குடித்துக் கொண்டு அலைந்தார். அதில் முக்கியமான ஒன்று விவசாயம் பொய்த்ததால் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரோடு இவர் குடித்த டீ. விதவைப்பெண்களையும், தந்தையை இழந்து எதிர்காலம் என்னவென்று புரியாத கலங்கிநின்ற குழந்தைகளையும் வைத்துக் கொண்டுதான் வந்தால் விவசாயத்தை மீட்டு எடுத்துவிடுவேன் என்று கூறினார்.
அவர்கள் கட்சியின்தேர்தல் அறிக்கை விவசாயத்தை மீட்டெடுக்க விவசாயிகளுக்கு வாழ்வளிக்க 3 முக்கியமான வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளித்திருக்கிறது. ஒன்று, விளைபொருளுக்கு உற்பத்திசெலவைப்போல ஒன்றரை மடங்கு விலைகொடுப்போம். இரண்டாவது அனைத்து இடுபொருட்களும் (விதை, களைக்கொல்லி , பூச்சிக்கொல்லி உள்ளிட்ட) குறைந்த விலையில் தரப்படும். மூன்றாவதாக, விவசாயத்திற்குஅரசு நிதி ஒதுக்கீடு மற்றும் பொதுச்செலவினங்கள் அதிகரிக்கப்படும் என்றது.
இந்த மூன்றில் எதையேனும் முயற்சித்தாரா? முயற்சித்து முடியாமல் போனதால் கைவிட்டு விட்டாரா? இல்லை. மாறாக, இது எதையும் அவர் அமல்படுத்த முனையவில்லை. 2015ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு வருகிறது. வழக்கைத் தொடர்ந்தவர் விளைபொருளுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவதாக சொன்னீர்களே இன்னும் தரவில்லையே அதை தர வேண்டும்என்று உச்சநீதிமன்றம் மூலமாக முறையிடுகிறார்.
பாஜகவின் மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் ஒன்றரை மடங்கு விலை சாத்தியமேயில்லை என்று சாதித்தது. இத்தனைக்கும் அதை அமல்படுத்தி அது சாத்தியமற்று போனது என்று சொல்லி இருந்தால் கூடபிரச்சனையில்லை. இதன் பொருள் என்னவெனில், அது சும்மா தேர்தலுக்காக சொன்னது, அதையெல்லாம் தூக்கிக் கொண்டு நீதிமன்றம் வரலாமா என்ற எகத்தாளம்தான் அதற்குள் இருந்தது.
வேலையற்ற வேலை
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் 10ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி தான் இருந்தது என்று குறிப்பிட்டு இந்தக்காலத்தில் ஏற்பட்ட வேலைஇழப்பையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்குவேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று பேசினார்கள். வேலை வாய்ப்புக்கு காத்திருந்த இளைஞர்கள் வேலைக்காக ஏங்கி வந்த பட்டதாரிகள் மத்தியில் இந்த வார்த்தை ஒரு மந்திரம் போல பற்றிக் கொண்டது. தாங்கள் சந்திக்கிற பிரச்சனைகள் , அவமானங்கள் இவற்றிலிருந்து வெளியேற இத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டால் அது தங்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக அமையும் என்றுநினைத்தார்கள்.
ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்களை கடந்துவிட்ட பிறகு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்பது பற்றி எந்த வார்த்தையும் பேசவில்லை. அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. 2016ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒட்டு மொத்த வேலை வாய்ப்பு வெறும் 2,31,000,இது இந்தியா முழுவதற்குமான கணக்கு, கடந்தஆண்டும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதற்கு முந்தைய ஆண்டு இதே நிலைதான் என்றாலும், அதற்கு மோடியை குறைசொல்லிவிட முடியாது. 2 கோடி எங்கே, 2 லட்சம்எங்கே? 2009ஆம் ஆண்டு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. இவர் வேலையை உருவாக்குவோம் என்றார், இப்போது வேலையற்றவர்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்.
கட்டெறும்பு வளர்ந்து கழுதையான கதை
பாஜக தேர்தல் அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்ட ஒரு அம்சம் குறைந்த அரசுநிறைவான சேவை, (ஆiniஅரஅ ழுடிஎநசnஅநவே, ஆயஒiஅரஅ ழுடிஎநசயேnஉந) ஆரம்பத்தில் அவர்கள் பதவி ஏற்றபோது மொத்தம் 45 அமைச்சர்கள் மட்டுமேஇருந்தார்கள். பத்திரிகைகளும், பாஜகவினரும் ஆஹா, எங்கள் பிரதமர் அரிச்சந்திரர் சொன்னதுபோல செய்து விட்டார், வெறும் 45 பேர்தான் அமைச்சர்கள் என்றெல்லாம் கொண்டாடித் திரிந்தார்கள். கொஞ்சம் காலம் ஆனது. இப்போது மத்திய அமைச்சர்கள் எண்ணிக்கை 78. அதிகபட்சமாக 82 அமைச்சர்கள் இருக்கலாம். சமீப காலத்தில் ஐக்கியமுற்போக்குகூட்டணி அரசாங்கம் இதேஎண்ணிக்கையில் மைச்சர்களை வைத்திருந்தார்கள். அதற்கடுத்து இதுதான் பெரிய மந்திரி சபை. இவர்களின் குறைவான அரசாங்கம் என்பதன் லட்சணம் இதுதான்.
பொதுவிநியோக முறை
உணவு பாதுகாப்புச் சட்டம் 2013ஆம் ஆண்டு அமலுக்கு வந்து விட்டது. 2014ஆம் ஆண்டு தேர்தல் சில கட்டங்கள் நடந்துவிட்ட பிறகுதான் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல்அறிக்கையில் அனைவருக்குமான பொதுவிநியோக திட்டம்தான் தங்கள் கொள்கை என்றது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சிறப்பான பொதுவிநியோக திட்டங்கள் நடந்த கேரளா, தமிழ்நாடு அரசாங்கங்களை நிர்ப்பந்தித்து உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டுமென்று ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டார்கள். தமிழகத்தில்50 சதவீதத்திற்கும் மேல் ரேசன் பொருட்கள் கிடையாது என்று அறிவித்து விட்டார்கள். இந்த அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் பொதுவிநியோக முறையில் அதை மேம்படுத்த எடுத்த ஏதாவது ஒரு நடவடிக்கையை கூற முடியுமா?
எல்லைப் பாதுகாப்பு
மோடிக்கு 56 அங்குலம் மார்பு, அந்நியதேசமெல்லாம் பயந்து போகும். இந்தியாவின் மீது கைவைக்க எவனுக்கும் துணிவிருக்காது என்றெல்லாம் பேசினார்கள். ஏதோ அடியாட்கள்தான் உலகத்திலேயே சிறந்த ஆட்சியாளர்கள் என பொதுபுத்தியை கட்டமைத்தார்கள். இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 3 முறை ஓராண்டுகாலத்திற்குள் ராணுவத்தளங்களின் மீது தாக்குதல் நடத்தியது இப்போதுதான் என்பதைஅவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
பதான்கோட்டில் 7 பேர், உரியில் 17 பேர், நக்ரோட்டாவில் 7 பேர் என 31 பேர் 3ராணுவ தளத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் மட்டும் கொல்லப்பட்டவர்கள். இது தவிர்த்து எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும் 8 வருட காலத்தில் 2016இல் தான் மிக அதிகம்.82 பேர் கொல்லப்பட்டார்கள்.
வெட்டிப்பேச்சும்வெற்றுக்கூச்சலும் வெற்றிகளைத் தந்துவிடாதுஎன்பதற்கான உதாரணம் மோடி அரசு.உள்நாட்டிற்குள் ஏதேனும் ஒருபிரச்சனைஎன்று எவரேனும் சொல்ல ஆரம்பித்தால் எல்லையில் ராணுவம் இக்கட்டான நிலையில்இருக்கிறது அவர்கள்எல்லாம் எவ்வளவு சிரமத்தில் இருக்கிறார்கள்என்று கதைப்பார்கள்.ஆனால், எல்லையிலிருந்த ராணுவ வீரரொருவர்தங்களுக்கு சாப்பாடு என்ற பெயரில் திரவம் தருவார்கள். அடியிலிருந்து அள்ளினால் அதுகூட்டு, கலக்கிவிட்டு அள்ளினால் அது சாம்பார்,தெளிய வைத்து ஊற்றிக்கொண்டால் அது ரசம்என்று சொல்லி இருந்ததை பார்த்ததும் இவர்கள்பொங்கி எழுந்தார்கள். ஏதோ சரி செய்யப்போகிறார்கள் என்று நினைத்தால் அப்படி சொன்னவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
குடிநீருக்கும் ஆபத்து
இவர்கள் எந்தஅளவு மக்கள் விரோதிகள் என்பதற்கு தேசிய நீர்க்கொள்கை சட்டமுன்வரைவு 2016 ஒரு நல்ல உதாரணம். இனிமேல் தண்ணீர் பொதுப்பண்டமல்லவாம், அது வியாபாரப்பண்டமாம். குடிநீர் கூட வறுமைக்கோட்டிற்கு கீழிருந்து உயர் பணக்காரர்கள், நடுத்தர வகுப்பினர் என்று வகை வைத்துதான் தருவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒருவிலை. கொடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரிப்பதற்கான செலவையும், அதாவது கொடுக்கப்பட்ட நல்ல தண்ணீரை நாம் பயன்படுத்திய பிறகு அதை,சுத்திகரிப்பதற்கான செலவையும் சேர்த்து வாங்கிக் கொள்வார்கள். இப்படித்தான் இருக்கிறது இவர்களின் நீர்க்கொள்கை.
எதைத்தான் விட்டு வைத்தார்கள்?
ஆதாரை ஆபத்து என்றவர்கள் இப்போதுகட்டாயமாக்கி நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும்13 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு பொருள் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் இங்கும் குறையும் என்று பேசினார்கள். ஆனால்விலை குறைந்த போதெல்லாம் கலால் வரியைஉயர்த்தி பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை 2 மடங்குக்கு அதிகமாக்கி விட்டார்கள்.கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பொதுமக்களுக்கு விலைகுறையாத ஒருவிநோதவித்தையை இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேரடி மானியம் கொடுத்தால் இன்னும் விலைகுறையும், ஏழைகளுக்கெல்லாம் நிறைய கிடைக்கப் போகிறது என்று பேசினார்கள். இதோ, அவர்கள் ஆட்சிக்கு வந்து 3ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், ஆட்சிக்குவந்தபோது 399 ரூபாயாக இருந்த சமையல்எரிவாயு சிலிண்டர் விலை ஏறத்தாழ இரட்டிப்பாக 785 ரூபாயாக மாறி விட்டது. ஆனால்,ஏழை, எளிய மக்கள் பெற்றுக்கொண்டிருக்கும் மானியம் மட்டும் 141 ரூபாயில் நிலை பெற்றிருக்கிறது.
அடுத்து சொன்னார்கள்-வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பிகட்டாமல் இருக்கும் தொகை பெருத்துக் கிடக்கிறது. நாங்கள் வந்தால் அதை குறைத்து விடுவோம் என்று பேசினார்கள். குறைக்காதது மட்டுமல்ல, மாறாக, பெரு முதலாளிகளான கடன்காரர்களிடமிருந்து வசூலிக்கும் தொகை குறைந்திருக்கிறது. 2014 மார்ச் கணக்கின்படி இந்தத்தொகை 1,73,800 கோடி. அந்த ஆண்டு 32,000 கோடி ரூபாய் மீண்டும் பெறப்பட்டது.இது 18.4சதவிகிதம். 2016ஆம் ஆண்டு ஆட்சி இத்தகைய வராக்கடன் 2,21,400 கோடி. இதில் 22,800 கோடி மட்டுமேவந்திருக்கிறது. இது 10.3 சதவிகிதம். இதுதான் இவர்கள் வேகமாக செயல்படும் லட்சணம். இப்படி ஒவ்வொரு துறையிலும் ஏற்கெனவே இருந்ததை விட இந்தியா கீழேபோயிருக்கிறது.
ஆனால், இந்தியா வளர்ந்திருப்பதாக கூலிக்கு ஆள் வைத்து பிரகடனம் செய்கிறார்கள். ஊடகங்களை விலைக்கு வாங்கியும், விளம்பரம் கொடுத்தும் அப்படி பேச வைக்கிறார்கள். இப்படித்தான் இவர்களது முன்னோர் வாஜ்பாய் காலத்தில் இந்தியா ஒளிர்கிறது என்று தம்பட்டம் அடித்தார்கள். இருண்டு கொண்டிருந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் தேர்தல் நேரத்தில் அந்த அரசாங்கத்தை ஒழிப்பதுதான் இந்தியாவை ஒளியூட்ட ஒரே வழி என்று முடிவுக்கு வந்தார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும், இன்னும் 700 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.