<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Wednesday, July 22, 2020

கொல்வோம் கொரானாவை


கொரானா எனும் கொள்ளை
நோய்  மனிதனை கொலை செய்கின்றது,,,,,
ஆலயங்கள் எல்லாம் அடைத்தே கிடக்கின்றன…
சாமிகளெல்லாம் நம்போல் ஓய்வே எடுக்கின்றன
வானத்தில் இருந்துதான் விசக்கிருமி வந்தாதா
,சீனத்து மண் தான் எமக்கும் தந்ததா
மாநகரின் மாநாட்டுக் காரனின்
மடச் செயல் என்பார் சிலர்,,,,
கதியற்று நிர்பதற்க்கு மதியிருந்தும்
விதி என்பார்  மற்றொரு பாலர்,,,,
பாவத்தின் சம்பளம் தான் மரண மென்போம்,
உண்மை,,,,உண்மை,,,,
தனித்தில்லாதது பாவம்,,,,
கைதீண்டுவதும்,   படி தாண்டுவதும் பாவம்,,,,
கூடாது என்ற போதும் கூடுவதும்,
கூட்டம் கூட்டுவதும்  பாவம்,,,
தேடாதே என்ற போது  தேடுவதும்,
வெளியில் ஓடாதே என்ற போது ஓடுவதும் பாவம் ,,,,
முகம் மூடாமல் ,இப்படியே தொட்டுத் தொடர்ந்தால்,,,,,
 பட்டுப் படர்ந்தால் …..
தொற்றி விடுவதோடு கொரானா நமமை
தொடர்ந்து வரும்  கதையாகும்,,,
 நாடே ஓர் நாள் சிதையாகும்,.
கொரானா ஒன்றே விதை யாகும்,,,,
இதுவரை மருந்தில்லை இதற்க்கு
 சொந்த பந்தங்களை மறப்பது ஒன்றே மருந்தாகும்
அண்டை வீட்டாரோடு அந்நியமாய்
இருப்போம் கொஞ்சநாள் அனைவரையும்,
பிரிந்தே கிடப்போம், கொஞ்சும் நாட்களை
விலக்கியே வைப்போம்,,,
தடைகளை தாண்டினால் இனி வரும்
நாட்களெல்லாம் தடைகளே தாண்டவம் ஆடும்,,,,
படி தாண்டா பத்தினிபோல் பத்திரம் மாய்
பத்தியம் காத்து, பக்தியோடு
 தனிமை ஒன்றே வைத்தியம் என்போம்
தனித்திருப்போம் என சத்தியம் செய்வோம்
கொரானா வைக் கொல்வோம் உயிரை வெல்வோம்,,,,..

Thursday, February 27, 2020

கவியரசன்


”கவியரசன் கண்ணதாசன்”

நற்குடியில் பிறந்த கவி மகன்
பொற் குவியில் புலர்ந்த குலமகன்
இப்புவியே புகழ்ந்த கலைமகன்
கம்பனை கற்றகவி யவன்
கற்பனை வளம் நிறைந்த தமிழ் அவன்
விற்பனை நோக்கமில்லா வாணிபன்
வான்புகழ் கொண்டவந்தான் வள்ளுவன்
அவன் குறள் படித்து தடம் பதித்த இளமகன்
இளமை துள்ளும் கவிபடைத்த காவியன்
இனிமை பொங்கும் கவி படைக்கும் வாலிபன்
பட்டினத்தார் பாடம் கூட உன் பாட்டிலுண்டு
பட்டி தொட்டி பாடல்களும் உன் ஏட்டிலுண்டு
மாட்டுவண்டி புகாசாலையிலும் உன்
பாட்டு வண்டியை பரபரப்பாய்  ஓட்டிச் சென்றாய் !
பாரதியின்பாட்டுக்களையும் படித்த.......நீ.....
அவன் பாட்டுத் தேரை சாரதியாய் ஓட்டிவந்தாய்
புத்தி கெட்ட மனிதன் கூட உன் பாட்டுக் கேட்டால்
புது சக்தி பெற்று வாழ்ந்திடுவான் பாட்டின் சங்கதி கேட்டு
பொருள் தந்தபாட்டுக்களை நீ படைத்ததாலே
பொருள் பல பெற்று வாழ தமிழ் அன்னை அருள் தந்தாளே!
வாயிற் படி நிறைந்தது தான் மனித வாழ்க்கைப்படி
அதைப் படிக்க வா இப்படி என வாஞ்ஜையோடு அழைத்தாய்
வாழ்கையின் அர்தம் சொன்ன அர்தமுள்ள கவியும்
பண் பாட்டு பண்ணும் பல ஆயிரம் படைத்துத் தந்தாய்
பற்றற்றவாழ்க்கையினை பற்றோடு பாடினாய்
முற்றும் துரந்த முனிவன்போல் முடிவையும் பாடினாய்
வலிமையான கருத்தினை எழிமையாகச் சொன்னாய்
எழிமையான கருத்தினை வலிமையாகச் சொன்னாய்
வலிகொண்டவாழ்வுதனை வெல்லவழி பல சொன்னாய்
அழகானக்கருத்தினை ஆழமாக்கிச் சென்றாய்
படித்துபட்டமோ பதவியோ பெற்றதில்லை,…..நீ
வடித்தகவியால்”கவியரசு”எனும்பட்டம்பெற்றாய்
ஐம்பதிலும்ஆசைகொண்டாய்ஆசையுடன்பாசம்கொண்டாய்
பதினாலும்பெற்றுபெருவாழ்வுவழ்திட்டாய்.

வாழ்க்கையைஅனுபவித்துவாழ்ந்தாய்அந்த
அனுபவத்தைகவிதைகளாய்படிக்கத்தந்தாய்
எட்டாவதாய்பிறந்தாய்நீ….முத்தையாவாக
எட்டுக்குமேல்நீபடித்ததில்லையாயினும் ,நீ
எட்டியஉயரம்இதுவரைஎவரும்எட்டியதில்லை
அர்த்தமுள்ளமதத்திற்குமேலும்அர்த்தம்சொன்னாய்
வருத்தமுள்ளமனங்களுக்குபாடல்மருந்தேதந்தாய்
இன்பவாழ்விற்குஇயன்றவரைபாடல்விருந்தேதந்தாய்
மதம்பிடித்தமனிதனிடம்தாமதமேபிடிக்கும்என்றநீ
தாமதமாய்செல்லாமல்அவசரமாய்சென்றாயோ!
உன்பாட்டில்மயங்காதோர்இப்பாரில்இல்லை…நீயோ
பாட்டிலில்மயங்கியதால்பட்டென்றுசென்றாயோ!
வந்தவரெல்லாம்தங்கிவிட்டால்,வருவோர்க்குஇடமேதுஎன்று
வானோரைவாழ்த்தவழிவிட்டுச்சென்றாயோ!
யவன்அழைத்தாலும்குழந்தைபோல்செல்வாயாம்!
எமன்அழைத்ததுதெரியாமல்ஏமாந்துசென்றாயோ!
நீ.... நின்ற இட மின்னும் காலியாக நிற்கின்றது
நீ.....தந்த கவி எல்லாம் ஆல் போல் தழைத் தேநிற்கின்றது
நீ......நிரந்தரம் ஆனவநன் தான் என்நிலையுலும்
நீ.......சொன்னது போல் உனக்கு மரணமே  இல்லை ,ஆனாலும்
மீண்டும் ஒரு முறை கவி மகனாய் பிறக்க வேண்டும்
தமிழன்னைக்கு தலைமகனாய் காலமெல்லாம் சிறக்க வேண்டும்
கவியரசனாய் மீண்டும் இந்த மண்ணை ஆழவேண்டும்.........


----- சுந்தரக்கண்ணன் -----


Monday, December 23, 2019

Thursday, December 19, 2019

Monday, December 18, 2017


நன்றி தீக்கதிர்
மறைக்க முடியாத மலை
கவிப் பேரரசு வைரமுத்து - சென்னை காமராசர் அரங்கில் பிப்ரவரி 13 அன்று தமிழாற்றுப்படை வரிசையில் கவிப்பேரரசு வைரமுத்து வழங்கிய கட்டுரையின் முழுவடிவம் இங்கு தரப்படுகிறது.
மறைமலையடிகளின் வரவு தமிழ் நெடுவெளியில் நிகழ்ந்த பெருநிகழ்வு என்றே கட்டுரைக்கிறேன். அவரை ஒரு நூற்றாண்டின் வெடிப்பு என்று சொல்லலாம். 1800 ஆண்டுகளாய்த் தமிழ் மொழியில் அப்பிக் கிடந்த அந்நியப் பாசிகளை முற்றும் களைய வந்த மொழிச் சலவையாளர் என்றும் கணிக்கலாம்.
இப்படிப்பட்ட முத்திரை வாக்கியங்களோடு இந்தக் கட்டுரையைத் தொடங்கக் காரணம் -
ஒன்பதாம் வகுப்போடு பள்ளியிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பைஞ்சிறுவன் பல்கலைக்கழகங்கள் ஆற்றவியலாத பெரும்பணிகளைப் போற்றி முடித்துப் போந்ததற்கன்று...
தொல்காப்பியம் – திருக்குறள் போன்ற தலைத்தமிழ் நூல்களையும், சிவஞான போதம், சிவஞான சித்தியார், திருச்சிற்றம்பலக் கோவையார், நன்னூல் விருத்தி, இறையனார் அகப்பொருள் என்ற இடைத்தமிழ் நூல்களையும் 21 வயதுக்குள் நெட்டுருச் செய்துமுடித்த நினைவாற்றலுக்குமன்று...
தாமே தோற்றுவித்துக்கொண்ட ‘இந்து மதாபிமான சங்கத்தின் வாயிலாய் ஆற்றொழுக்கான பேச்சாற்றலைப் பெருக்கிக்கொண்டு ‘நாகை நீலலோசினி’, ‘பாஸ்கர ஞானோதயம்’, ‘திராவிட மந்திரி’ போன்ற இதழ்களில் எழுதிய விருப்பக் கட்டுரைகளாலும் மறுப்புக் கட்டுரைகளாலும் தம் எழுத்தாற்றலை இளமைப் பருவத்திலேயே செழுமை செய்துகொண்டதற்குமன்று...
23 வயதிலேயே சென்னைக் கிறித்துவக் கல்லூரிக்குத் தமிழாசிரியராய் விளங்கும் தகுதி பெற்றமைக்குமன்று...
டி.கே.சி என்னும் ரசிகமணிக்கும், நாவலர் சோமசுந்தர பாரதிக்கும், வையாபுரிப் பிள்ளைக்கும், திருப்புகழ் கிருஷ்ணசாமி அய்யருக்கும், தணிகைமணி செங்கல்வராய பிள்ளைக்கும் கல்லூரியில் பாடம் பயிற்றுவித்த தமிழாசான் என்ற தகைமைக்குமன்று...
தாம் பாடமாய்ப் பயிற்றுவித்த முல்லைப்பாட்டுக்கு உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரையை மெச்சவியலாமல் 28 வயதில் தாமே ஒரு புத்துரை எழுதி மாணவர்க்குப் பயிற்றுவித்த மாண்புக்காகவுமன்று...
தமிழ் – ஆங்கிலம் – சமஸ்கிருதம் என்ற மும்மொழிகளிலும் முறைபோகிய மூதறிவுக்காகவுமன்று...
வேதாசலம் என்று பெற்றோரிட்ட பெயரை மறைமலையென்று மாற்றிக்கொண்ட புரட்சிக்காகவுமன்று...
இலக்கியம் – சமயம் – தத்துவம் – வரலாறு – ஆய்வியல் – பண்பாட்டியல் – மருத்துவம் – மறைபொருள் முதலிய துறைகளில் 74 ஆண்டுகளுக்குள் 54 நூல்கள் படைத்த நுண்மாண் நுழைபுலத்துக்குமன்று...
பின் எற்றுக்கு?
தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை என்ற ஆழ்ந்த அடையாளத்திற்காகவே; எம்மொழித் துணையுமின்றித் தனித்தியங்கவல்ல செம்மொழியென்ற நம்பிக்கையைத் தமிழுக்குத் தந்ததற்காகவே.
முத்தெடுக்கப் போனவன் பவளப் பாறையைக் கண்டுபிடித்த கதைபோல், மொழித் தூய்மை காக்கப்போய் இனப்பெருமை காத்ததுதான் மறைமலை அடிகளின் திருவரலாறு.
பன்னூறாண்டுகளாய்த் தமிழ்மீது படிந்துகிடந்த அயன்மொழிச் சாம்பல்களை ஓர் ஊழிக் காற்றாய் அவர் வந்து ஊதிப் பார்த்தபோதுதான் உள்ளிருந்த தணல் “நான் தான் தமிழ் தமிழ் தமிழ்” என்று தகித்தது. சொல் என்பது வெறும் ஒலிச்சுட்டோடு பொருட்குறிப்போடு ஒழிந்துபோவதில்லை. ஒரு சொல் துலக்கப்படும்போது மறைக்கப்பட்ட வரலாற்றின் - பண்பாட்டின் மீட்டுருவாகவும் அது திகழ்கிறது என்பதும் தெற்றன விளங்கியது.
வேதாரண்யம் என்று சுட்டும்போது அந்த ஊரின் வயது – வரலாறு – பண்பாடு என்ற மூன்றும் நமக்கு முற்றும் விளங்கவில்லை. திருமறைக்காடு என்று சுட்டப்படுமிடத்து அதன் நூற்றாண்டுகளை நம்மால் நுகரமுடிகிறது.
கபிஸ்தலம் என்ற பெயரை அகழ்ந்து பார்த்தால் உள்ளே ‘குரங்காடுதுறை’ தோன்றுகிறது. அருணாசலம் என்ற சொல்லின் நதிமூலம் தேடி நகர்ந்தால் அது ‘திருவண்ணாமலை’யில் முடிகிறது. ஜம்புகேஸ்வரம் என்ற ஊர்ப்பெயரை ஊடுருவிப் பார்த்தால் உள்ளே ‘திருவானைக்காவல்’ தென்படுகிறது. இப்படித்தான் தமிழ் மொழியின்மீது வந்து படிந்த பிறமொழிகள் தமிழரின் வரலாற்றைத் துடைத்துவிட்டு, தம்மிலிருந்தே வரலாறு தொடங்கப்பெற வேண்டுமென்று சூழ்வினையாற்றின.
இந்தப் பெயர் மாற்றமென்ற பெருஞ்செயலைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது.
மறைமலையென்ற அலை மட்டும் அடித்திராவிடில் காலப்போக்கில் தமிழ் இலக்கியங்களின் மூலங்களும்கூட முகம்மாறிப் போயிருக்கலாம். தொல்காப்பியம் ஐந்திரமாகியிருக்கலாம்; தொல்காப்பியர் திரணதூமாக்கினி ஆகியிருக்கலாம்; திருவள்ளுவர் ஸ்ரீவல்லபராய்த் திரிந்திருக்கலாம்; தமிழ்நாடு என்பது வட இந்தியாவின் தென்துண்டு என்று வரலாறு வளைக்கப்பட்டிருக்கலாம்.
சொல்லில் என்ன இருக்கிறது என்று சொல்வார்க்கு ஒன்று சொல்ல வேண்டும்.
ராமசாமி - ராமஸ்வாமி என்ற பெயர்களின் எழுத்து மாற்றத்தால் ஒருவன் தன் சொத்துக்களை இழக்கிறபோது அறிவான் பெயரில் என்ன இருக்கிறது என்ற பேருண்மையை.
மறைமலையடிகளுக்கு எப்படித் தோன்றிற்று இந்தத் தனித்தமிழ்க் கருத்தியல்?
“விழுமிய தமிழ்ப் பழநூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளந்தைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று” என்று மறைமலையடிகள் முன்மொழிந்திருந்தாலும், அவர்தம் தொடக்க காலத்து உரைநடையில் வடசொற்கள் சிலவும் வாராமல் இல்லை.
‘பகுத்துணர்வும் மாதரும்’ என்ற கட்டுரையில் ‘பகுத்துணர்ச்சியில் சிறந்த ஜேம்ஸ் வாட் என்னும் துரைமகன்’ என்றும், ‘தனித்தமிழ் மாட்சி’ என்ற கட்டுரையில் ‘ஆங்கிலத்தில் வல்ல நல்லிசைப் புலவர்களான ஷேக்ஸ்பியர், ஷெல்லி முதலியோர்’ என்றும் வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்க்காமல் எழுதியிருக்கிறார். காளிதாசனின் சாகுந்தலத்தை மொழிபெயர்த்த காலையிலும் ‘துஷியந்தன்’ என்றும், ‘விதூஷகன்’ என்றும், ‘அப்ஸரஸ்’ என்றும் அதனதன் ஒலி வழியேதான் இயங்கியிருக்கிறார்.
தனித்தமிழ் ஊற்று எப்போது வெடித்து வீறிட்டது என்பதற்குச் சுவையான நிகழ்வொன்று சுட்டப்பெறுகிறது அவரது வாழ்வில்.
அந்திக்கதிரவன் மண்ணைப் பொன் செய்யும் ஒரு மாலைப் பொழுதில், வீட்டு முற்றத்தின் வெளிச் சோலையில், கலைபயில் தெளிவும் கட்டுரை வண்மையுங்கொண்ட தம் நிறைதிருமகள் நீலாம்பிகையோடு உலாவிய காலையில், ‘ஒரு திருப்பாட்டுப் பாடு திருமகளே’ என்று கலைக் கட்டளையிடுகிறார் தமிழ்த்தந்தை.
வள்ளலார் பாட்டுக்கு இசைகூட்டுகிறார் நீலாம்பிகை.
“பெற்றதாய்தனை மகமறந் தாலும்
பிள்ளையைப் பெறுதாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே”
இந்தப் பாடலைக் கண்மூடி உயிர்திறந்து உள்வாங்கிக்கொண்டிருந்த அடிகளாரின் நெஞ்சில் ஆழப்பாய்ந்ததொரு மின்னல்.
“நீலா! இப்பாடலில், தேகம் என்றொரு வடசொல் வந்துளது. அவ்வொன்றையும் நீக்கி அவ்விடத்தில் ‘யாக்கை’ என்னும் தமிழ்ச்சொல் பெய்யப் பெற்றிருக்குமானால் இச்செய்யுளின் ஓசையின்பம் எவ்வளவோ மேம்பட்டதாக இருந்திருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குறைகின்றது. அன்றியும், நாளடைவில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று அச்சொற்களுக்கு நேரே வழங்கி வந்த நம் அருமைத் தமிழ்ச் சொற்கள் மறைந்துவிடுகின்றன” என்றார். அந்த நொடியில் உடைந்து சிதறியது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தமிழை அழுத்திக்கிடந்த அயற்பாறை. அன்று முதல் மறைமலையடிகளின் வாழ்வும் வாசிப்பும் மீள்பார்வைக்குள்ளாயின.
தம் எழுத்திலும் பேச்சிலும் அயற்சொல் விரவாத தனித்தமிழையே வாழ்நாள் முழுவதும் வழங்குவதென்று உறுதிகொண்ட மறைமலையார் தாம் அவ்வண்ணமே வாழ்ந்ததன்றித் தமிழர்களையும் அவ்வண்ணமே பயிற்றுவித்தார்.
‘எழுத்தெண்ணிப் பயின்றவர்’ என்பது ஆழங்காற்பட்ட கல்வியாளர் ஒருவர் அடையும் அதிகப்படியான அடைமொழியாகும். மற்றவர்க்கது பொருந்துமோ இல்லையோ அடிகளார்க்கு மட்டும் அப்படியே பொருந்தும்.
“12 நூற்பாக்களையும் 41 வரிகளையும் 216 சொற்களையும் 624 எழுத்துக்களையும் கொண்டது சிவஞானபோதம்” என்று கணக்கிட்டு ‘எண்ணித் துணிக கருமம்’ என்ற குறளுக்கு மற்றுமொரு பொருளாய் விளங்கியவர் மறைமலை அடிகளார். சைவப் பொருளாராய்ந்த இந்தப் பெரும்பயிற்சிதான் முல்லைப் பாட்டையும் எண்ணிக் கற்கும் எண்ணம் தந்தது. 103 அடிகளையும் 500 சொற்களையும் கொண்ட முல்லைப்பாட்டில் 9 மட்டுமே வடசொற்கள் 2 மட்டுமே திசைச்சொற்கள் என்று ஆராய்ந்து அறிவித்த அறிஞர் பெருமான், முல்லைப்பாட்டில் இரண்டே விழுக்காடுதான் பிறமொழிச்சொற்கள் என்று அறுதியிட்டு உறுதி செய்தார். ஆனால் 2810 முதன்மைச் சொற்கள் கொண்ட திருவாசகத்தில், 373 வடசொற்களை ஆராய்ந்துகண்ட அடிகளார், திருவாசகத்தில் 7 முதல் 8 விழுக்காட்டு வடசொற்கள் நின்று நிலைத்திருப்பதைக் கண்டு சொன்னார்.
தனித்தமிழ் எண்ணம் தலையெடுத்த பிறகு தாம் எழுதிய பழைய நூல்களிலும் அயன்மொழிச் சொற்களைக் களைய வேண்டுமென்று கட்டளையிட்டுக்கொண்டார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரையின் முதற் பதிப்புக்கும் நான்காம் பதிப்புக்கும் 28 ஆண்டுகால இடைவெளியிருந்தது. நான்காம் பதிப்பின் முகவுரையில் “முற்பதிப்புகளில் இடையிடையே விரவியிருந்த சிற்சில வடசொற்களையுங் களைந்தெடுத்து இவ்வுரை நடையைச் சாலவுந் தூய தனித்தமிழாக்கியிருக்கின்றோம்” என்று எழுதியவரின் ஊட்டம் உணர்தற்குரியது.
அதன்பின்னர் அவரது பேச்சு மடைமாற்றம் கண்டது; எழுத்து நடைமாற்றம் கொண்டது. இவ்விடத்தில் ஊன்றி உணரத்தக்கது ஒன்றுண்டு. தனித்தமிழ் காண வேண்டும் என்ற வெறியில் அவர் ஈரமற்ற இருண்மை மொழியில் எழுதினாரில்லை. கோழியடைக்கும் கூண்டுக்குள் யானையடைக்க முயன்றாற்போல் பொருந்தாத மொழியில் தம் புலமையைத் திணித்தாரில்லை.
நேற்றுப் புதிதாய் வாங்கிய பொன் நகைகளை ஊர்காண வேண்டுமென்று, பொழுது விடிந்ததும் இழவு வீட்டுக்கு அணிந்து செல்லும் ஒரு பணக்காரப் பாவையைப்போல் தனித்தமிழ் நடை சிலவிடங்களில் பொருந்தாமற் போய்விடுகிறது. தனித்தமிழ்ப் பேரார்வத்தால் தன் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்ட வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் சென்னை தங்க சாலையில் நிகழும் ஒரு காதற்காட்சியை இப்படிக் கட்டுரைக்கிறார் :
“அவ்வீட்டின் மாடத்தும்பர், ஓர் அறையின் கண்ணே, இன்னிசைப் பாட்டும் மன்னிசைக் கல்வியும் வல்லளாய் எழிலும் குணமுமியைந்த பூங்கொம்பராய் மிளிர்தரும் ஓர் இளம் பருவப்பெண் தனது வார்குழல் கோதி முடித்துக்கொண்டு நின்றாள். அப் போழ்தத்துக் கரிய மாலனைய காளையொருவன் விரைந்து அவட்குப் பின்புறம் போந்து, அவடன் விழிகளிரண்டையும் தன்னிரு கையாலிருகப் புதைத்துக்கொண்டு நின்றான். அன்னணம் ஒருவன் கண்புதைத்ததுணர்ந்த அந்நங்கை, ‘விடுதி விடுதி விடுதி’ என்று மெல்லெனக் கூயினள். அதற்கவன் ‘இதுவே நந்தமக்கேற்ற நல்ல விடுதி’ என்று கூறி நகைத்தனன். அவள் சிறிது விலகிக்கொண்டு நின்று, ‘நீ யென்னைத் தவிர்த்து வேறெம் மங்கையையுங் கனவிலும் விழையேன் என்று வாய்மொழி கூறினாலன்றி, நீயென் கூந்தலைத் தொடற்பாலையல்லை என்றாள்’”.
இந்த எழுத்தோவியத்தில் சொற்களெல்லாம் தனித்தமிழ்ச் சொற்களே. நடையும் மேம்பட்டதே. ஆனால் மொழி, ஓசையோடு நடைபெறுகிறதன்றி உணர்ச்சியோடு ஒட்டவில்லை. இது ஒரு நெகிழிக்கனி (Plastic Fruit). பார்க்க அழகு; ஆனால் பசிக்குதவாது. மறைமலையடிகள் நடையோ தனித்தமிழை உள்வாங்கி உயிர்ப்போடு நடைபெறும் உணர்ச்சிநடை. புலமையைப் பின்னிறுத்திக் கருத்தை முன்னிறுத்தும் கலைநடை.
“சாதி வேற்றுமை என்னும் கொடிய தூக்குக் கயிறானது காதல் அன்பின் கழுத்தை இறுக்கிவிட்டது. எந்தப் பெண் மகளாவது தான் காதலித்த இளைஞனை மணங்கூட இடம் பெறுகின்றனரா? எள்ளளவும் இல்லையே ஏன்? அவள் கயல்மீனை ஒத்த கண்ணழகியாக இருந்தாலென்ன? கண் குருடான ஒருவனைத் தவிர வேறு மணமகன் தன் இனத்தில் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்து தீரல் வேண்டும். அவள் முத்துக் கோத்தாலன்ன பல்லழகியாய் இருந்தாலென்ன? தம் பாழும் இனத்தில் ஒரு பொக்கை வாய்க்கிழவனைத் தவிர வேறு மணமகன் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்து தீரல் வேண்டும்”.
சுடர்கொண்ட சொல்லும் – உயிரள்ளும் பொருளும் – உணர்ச்சியும் - உண்மையும் கூடிக் கும்மியடிக்கும் இந்தக் கொழுந்தமிழ் நடை தமிழ்நாட்டு அரசியலையே புரட்டிப்போட்ட ஒரு புரட்சிக்கு வித்திட்டது. அடிகளாரின் எழுத்து புலவர்களுக்கு மட்டுமன்று - தலைவர்களுக்கும் ஒரு கோட்பாட்டுப் பொருளானது.
மறைமலையடிகள் ஊதியத்திற்கு எழுதிய பிழைப்பெழுத்தாளர் அல்லர்; எழுதியே பிழைக்கும் காலமும் அதுவன்று. “பட்டினப்பாலை ஆராய்ச்சியின் முதற்பதிப்பு முதன் முதல் 1906ஆம் ஆண்டு வெளிவந்தது; அப்போது அதில் 250 படிகளே பதிப்பிடப்பட்டன. அவ்விருநூற்றைம்பது படிகளுஞ் செலவாகப் பதின்மூன்றாண்டுகள் சென்றன” என்று அவர் எழுதுகிறபோது அச்சோ என்று எரிகிறது அடிவயிறு.
தமிழ் ஆட்சி பெறவும் தமிழர் மீட்சி பெறவுமே அவர் எழுத்தும் பேச்சும் மூச்சுள்ளவரை இயங்கின என்று உணரமுடிகிறது.
தண்ணீரைத் தேடிப் பயணித்த கடப்பாரை புதையலில் முட்டிப் பொறி தட்டியதுபோல, மொழி மீட்சிக்குத் தோன்றிய தனித்தமிழ் இயக்கம் இனமீட்சியில்போய் முடிந்தது.
திராவிட இயக்கத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்த கொள்கைகளுள் ஒருபாதி இனம்; மறுபாதி மொழி. அந்த மொழிக்கொள்கை மறைமலையடிகளின் மூளைக் குழந்தை என்பதை மறைக்கவோ மறுக்கவோ இயலாது. ஒருவரைப் பாராட்டுவதில் பணத்தைவிடச் சிக்கனமாய்ச் சொற்களைப் பயன்படுத்துகிற பெரியார் மறைமலை யடிகளைத் தன் கரமென்று சொல்லியிருக்கிறார்.
“மறைமலை யடிகளும் எம்.எல்.பிள்ளையும் எனக்கு வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள். எனக்குப் பகுத்தறிவுப் பாதையில் ஏதேனும் அய்யம் உண்டாகும் போதெல்லாம் அவர்களிடமே தீர்த்துக்கொள்வேன்”. பெரியாரின் இந்தக் கூற்றை நான் பெரிதினும் பெரிதாய்க் கருதுகிறேன்.
தனித்தமிழ் என்ற கருத்தியலைக் கண்டறிந்ததோடு நின்றிருந்தால் மறைமலையடிகளுக்கு இந்த மாண்பு இருந்திருக்காது. தம் செம்மாந்த புலமையால் அதைச் செயற்படுத்தி நிறுவனமாக்கி நிலைப்படுத்தியதே அவரது மாட்சிக்குச் சாட்சி. அவர் பெற்றிருந்த மும்மொழிப் புலமை என்ற பெருந்தகுதி அவர்கொண்ட கொள்கையை அறிவியல் அடிப்படையில் நிறுவி முடிக்கப் பெருந்துணை புரிந்தது.
ஒரு மொழியை ஊடறுத்துப் பிறமொழிச் சொற்கள் உள்நுழைவது எதனால் நேர்கிறது? ஓர் இனத்தார் தம் மொழிவெளி கடந்து பிறவெளி புகுந்தாலும், பிறமொழி பேசுவார் தம்வெளி கழிந்து உள் நுழைந்தாலும் பண்பாட்டு வணிகப் பரிமாற்றங்கள் எவ்வழியில் நிகழ்ந்தாலும் ஒரு மொழி பிறமொழியை உள்வாங்கியே தீரும். ஆனால் அதன் விழுக்காடு எவ்வளவு - விளைவுகள் என்னென்ன என்பதையே ஒரு மொழி வல்லான் கருதுவான்; கவலைகொள்வான்.
மாற்றம் தானே மானுடக் கோட்பாடு. மொழியும் ஓர் உயிரிதானே! ஆதலால் அதுவும் மாறித்தானே ஆக வேண்டும். பிறமொழிக் கலப்பு என்பது பண்பாடுகள் நெருங்கிவரும் நிகழ்வுதானே. உலகம் உருண்டையாகவும் உலகப் பண்பாடு தட்டையாகவும் விளங்கும் மானுடச் சூழலில் பிறமொழிக் கலப்பால் ஒருமொழி செழுமையுறும்தானே என்று எதிர்மறைச் சிந்தனைகளை உண்மைபோல் தோற்றுவிப்பார் சில உரை வல்லார். இந்தத் தவறான கருத்தை உடைத்தெறிய வேண்டும்; அதற்கு தருக்க அறிவு வேண்டும். கொண்ட கொள்கையை நிறுவத்தக்க தருக்க அறிவு வாய்க்கப்பெறாததால் தமிழர்கள் தங்கள் நீண்ட வரலாற்றில் நிறைய இழந்திருக்கிறார்கள்.
மறைமலையடிகளார் தமிழுக்கு வாய்த்த ஒரு தருக்கப் பேரறிஞர். ‘தனித்தமிழ் மாட்சி’ என்னும் கட்டுரையில் அவர் எழுதுகிறார் :
“மாறுதல் என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் என்னை? ஒன்று தன் றன்மை திரிந்து மற்றொன்று ஆதலா? அல்லது அது தன் இயல்புக்கு ஏலாதவற்றொடு கலக்கப்பெற்றுத் தன்நிலை குலைதலா? அல்லது தன்னிலைக்கு ஏற்றவாறு பிறவற்றின் உதவியால் தானே வரவர வளர்ந்து திரிபுறுதலா? எனின், இம் மூன்றும் அம்மாறுதல் என்னுஞ் சொல்லுக்குப் பொருளேயாம்.
முதலிற் சொன்ன பொருளின் படி, தவளையினத்திற் சேர்ந்த சில சிற்றுயிர்களும் பட்டுப்பூச்சி முதலியனவும் முதலில் ஒருவகை யுருவத்திலிருந்து, பிறகு அவ்வுரு முழுதுந் திரிந்து தவளையாகவும் பட்டுப் பூச்சி முதலியனவாகவும் மாறுகின்றன; இரண்டாவது சொன்ன பொருளின்படி, மக்கள் முதலான எத்தகைய உயிர்களுந் தம்முடம்பின் இயல்புக்கு ஏலாத நோய்ப் புழுக்களோடும் பாம்பின் நஞ்சையொத்த நச்சுப் பொருள்களோடுங் கலக்கப் பெறுமானால் தம்முடம்பின்நிலை குலைந்து மாறி விரைவில் அழிந்துபோகின்றன; இனி, மூன்றாவது சொன்ன பொருளின்படி, உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுந் தத்தம் நிலைக்கு ஒத்த பொருள்களின் சேர்க்கையால் தமது நிலை கெடாமலே வளர்ந்து திரிபெய்தி வருகின்றன.
தம் நிலைகுலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைப்பிடியாய்ப் பிடித்துக்கொண்டு, அதன்படி நமது அருமைச் செந்தமிழ்மொழியுந் தனது தூயநிலை குலைந்து மாறுதல் அடைய வேண்டுமென்று உரைப்பது அறிவுடையோரால் ஏற்றுக்கோடற் பாலதாமோ?”
தவிர்க்க முடியாத இந்தத் தருக்கம் தமிழ்ப் பகைவர்களைக் கட்டிப்போட்டது.
பல்வேறு தமிழ் ஆளுமைகளின் கூட்டுக்கலவை மறைமலையடிகளார். “பரிமேலழகரின் மொழியொழுங்கும், நக்கீரரின் தருக்கச் செறிவும், சேனாவரையரின் திட்ப நுட்பமும், சிவஞானமுனிவரின் மறுப்புரை மாட்சியும், கூடிக் கலந்து கொழித்த மொழியே மறைமலையாரின் உரைநடையாகும்” என்று அறிஞர் கூட்டம் அறுதியிடுகிறது.
பெய்த பெருமழையின் பேரீரம் வெவ்வேறு தாவரங்களில் காலங்கடந்தும் காட்சிப்படுவதுபோல் மறைமலையடிகள் அன்று கொளுத்திப்போட்ட நெருப்புதான் இன்றளவும் வெவ்வேறு திரிகளில் விளக்குகளாய் விளக்கமுற நிற்கிறது.
முதலில் அது ஊடக மொழியை உருமாற்றிப்போட்டது. சில ஏடுகள் ‘ஜல சப்ளை ரத்து’ என்று தலைப்பிட்டுக்கொண்டிருந்தன. இதனுள் ஜலம் - சமஸ்கிருதம்;
சப்ளை - ஆங்கிலம்; ரத்து - உருது. இது ‘தண்ணீர் வரத்து நிறுத்தம்’ என்று தமிழாகியது மறைமலையடிகளால்.
திராவிட இயக்க மேடைகளும் மறைமலையடிகளின் தாக்கத்தால் ஆக்கமுற்றன. ‘அக்ராசனர்’ தலைவரானார்; ‘மகாஜனங்கள்’ பொதுமக்கள் ஆயினர்; ‘பிரேரணை’ தீர்மானமாயிற்று; ‘நமஸ்காரம்’ வணக்கமாயிற்று. மாநில அலுவல் மொழியாகத் தமிழாவதற்கு ஒரே வழி ஆங்கிலத்தை எழுப்பிவிட்டுத் தமிழ் ஏறி அமர்வதுதான். ‘முனிசிபாலிட்டி’ நகராட்சி ஆயிற்று; ‘கார்ப்பரேஷன்’ மாநகராட்சி ஆயிற்று; ‘கமிஷனர்’ ஆணையாளரானார்; ‘ஜி.ஓ’ அரசாணையானது; ‘சர்குலர்’ சுற்றறிக்கை ஆனது. மறைமலையடிகளின் நீண்டு விழுந்த நிழல்களே இவையெல்லாம்.
அறிஞர் அண்ணா இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதும், தமிழ் நாட்டுத் தலைநகரத்திற்குக் கலைஞர் ‘சென்னை’ என்று பெயர் சூட்டியதும் மறைமலையடிகளால் நேர்ந்த மங்கலங்களாகும்.
மாறிவரும் உலகச் சூழலில் முற்றிலும் தனித்தமிழால் இயங்கவியலாது என்பதையும் அடிகளார் அறிவார். அதற்கு ஒரு புறனடையும் வழங்கியிருக்கிறார்.
“இன்றியமையா இடங்களில் வடசொற்கள் சிலவற்றை எடுத்தாளுதல் வழுவென்று யாங் கூறவில்லை. பொருள்களைக் குறிப்பிடுவதற்கு ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருக்கையில் அவற்றை விடுத்துப் பிறவற்றைப் புகுத்தலையே பெரியதொரு குற்றமாக நினைக்கின்றோம்” என்று ‘தனித்தமிழ் மாட்சி’யில் எழுதுகிற அடிகளார் தாம் உள்ளூர்த் தமிழர் மட்டுமல்லர்; உலக மானுடன் என்பதை உறுதி செய்கிறார்.
மறைமலையடிகளின் தேவை இன்னும் தீர்ந்துவிடவில்லை. உலகமயமாதல் என்ற ஊழி அலை உலகத்தின் கரைகளிலெல்லாம் விசிறியடிக்கும் இந்த வேளையில்தான் தூணைப்போல் தேவைப்படுகிறது மறைமலையடிகள் துணை.
தனித்தமிழ் இயக்கத்தின் ஊற்றுக்கண்களைத் தமிழர்கள் காலந்தோறும் காத்துவர வேண்டும்.
தமிழ்மொழியின் பெயர்ச் சொற்களெல்லாம் தமிழ்தானா என்ற வினாவுக்கு முன்னால், தமிழின மாந்தர்களின் பெயர்களெல்லாம் தமிழ்தானா என்று ஓர் எரியும் வினாவோடு நம்மை எதிர்கொள்கிறது நிகழ்காலம். தமிழ்நாட்டு உழைக்கும் மக்களே தம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டி வழி வழியாக வழங்கினார்கள். திராவிட இயக்க எழுச்சியில் தனித்தமிழ்ப் பெயர்கள் வீடுகள்தோறும் விளங்கின. தற்காலத்தில் பொருளறியா ஓசைகளும் கிரந்த எழுத்துக்களின்றி இயங்கமுடியாத ஒலிக்கூட்டமும் தமிழர்களின் பெயர்களாகத் துலங்கத் தொடங்கியிருப்பது இன வரலாற்றுக்கு எதிர்மறையாகும். ஒலியும் பொருளும் அழகும் கொண்ட நற்றமிழ்ப் பெயர்களை நாடுதோறும் விதைக்க வேண்டும்.
அனிச்சம், ஆதிரை, இன்பா, ஈழச்செல்வி, எழிலி, ஏந்திழை, உறங்காமலர், ஊஞ்சல்நிலா, ஐம்பொன், ஒண்டொடி, ஓவியா என்பன போன்று பெண்பாற் பிள்ளைகளுக்கும், அன்பன், ஆதவன், இனியன், ஈழவன், என்னவன், ஏரழகன், உறங்காப்புலி, ஊரன், ஐயன், ஒப்பிலான், ஓவியன் என்பன போன்று ஆண்பாற் பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டினால் நாளடைவில் அந்த ஓசைமீதே நமக்கு ஆசைவரும்.
உலகச் சந்தையை வென்றெடுக்க வேண்டுமென்ற வேட்கையில் உள்ளூர் அடையாளங்களைத் தொலைத்துவிடக் கூடாது. முத்துக்குளிக்கும் அவசரத்தில் மூச்சை இழந்துவிடக் கூடாதல்லவா?
தமிழர்கள் அனைவரும் தமிழ்ப்பெயர் சூடிக்கொண்டால், பள்ளி கல்லூரி ஆவணங்களில் – அடையாள அட்டைகளில் – குடும்பக் கோப்புகளில் – வங்கிகளில் – அரசு – தனியார் அலுவலகங்களில் - நீதிமன்றங்களில் – காவல் நிலையங்களில் – ஊடகங்களில் – பயணங்களில் - உலகவழக்கில் எட்டுக்கோடித் தமிழ்ப்பெயர்கள் எல்லா நாட்களிலும் புழங்கப்பெறும். அந்த எட்டுக்கோடிப் பெயர்ச் சொற்களின்மீது ஒரு மொழி தன்னை ஊன்றி நடக்கும் உறுதிகிட்டும்.
தமிழர்காள்! இப்போது துலங்கும் பெயர்கள் இப்படியே துலங்கட்டும்; இனிவரும் தலைமுறைகளுக்குத் தமிழ்ப் பெயர்களே விளங்கட்டும்.
மீண்டும் இயற்கைக்குத் திரும்ப வேண்டும் என்று சுற்றுச்சூழல் சொல்கிறது. மீண்டும் கூட்டுக்குடும்பத்திற்குத் திரும்ப வேண்டுமென்று மானுடவியல் பரிந்துரைக்கிறது. தாய்மொழிக் கல்விக்கே திரும்பவேண்டுமென்று உலகக் கல்விக்கொள்கை உரக்கக் கூவுகிறது.
நாமும் திரும்ப வேண்டும். மறைமலைகள் மீண்டும் வேதாசலங்களுக்குத் திரும்ப வேண்டாம்; வேதாசலங்கள் மறைமலைகளுக்குத் திரும்பட்டும்.

ஆண்டு வரிசைப்படி த