மாட்டிறைச்சி விவகாரத்தை விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்
சென்னை, மே 31 -
மாட்டிறைச்சி தொடர்பான விவகாரத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மோடி அரசுக்கு ஆரம்பம் முதற்கொண்டே மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.அசைவம் உண்ணும் பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையில் கைவைக்கும் பாஜக அரசின் இந்துத்துவா நடவடிக்கை ஏற்க முடியாது என்று அறிவித்துள்ள அவர், இப்பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக மாநில முதல்வர்களின் கருத்தையும் திரட்டி வருகிறார்.
இந்நிலையில், புதனன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், மாடு விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு உரிமையில்லை என்றும், இவ்விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
“மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தக் கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை; அதே போன்று இறைச்சிக்காக மாடு வெட்டுவதை முறைப்படுத்தும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு இல்லை; மத்திய அரசின் ஒழுங்குபடுத்தும் விதிகள் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்; உணவிற்காக கால்நடைகளை வெட்டுவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டது; ஆனால், மத்திய அரசின் உத்தரவு விலங்குகள் வதைத் தடை சட்டத்திற்கு எதிரானது; மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது; அதற்கு பாஜக-விற்கு உரிமை இல்லை.” என்று கூறியுள்ள பினராயி விஜயன், “இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment