நன்றி = தீக்கதிர்
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகிறார்.
திருவனந்தபுரம், மே 26-
பினராயி விஜயனின் ஓராண்டு கால ஆட்சியை பாராட்டாத ஊடகங்களே இல்லை என்ற அளவிற்குமிகப்பெரும் சாதனைகளை படைத்து முதலாண்டு நிறைவு விழாவை கொண்டாடி இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு.இது இடதுசாரிகளின் ஆட்சி; நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான ஆட்சி;
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பின்பற்றி வரும் தீவிர மதவெறி - அதிதீவிர தாராள மயம் ஆகிய இரண்டு தீமைகளுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டே நாடே வியக்கும் சாதனைகளை படைத்து நிற்கிறது இந்த இடதுசாரிகளின் ஆட்சி.இதை கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல; கம்யூனி ஸ்ட்டுகளின் எதிரிகளாகவே ஊடக உலகில் செயல்படுகிற பல ஏடுகள் எழுதி இருக்கின்றன.
கேரளத்தில் மாத்ருபூமியும், மலையாள மனோரமாவும் மற்றவர்களின் விமர்சனங்களை பிரதிபலித்தாலும் பினராயி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பாராட்டியிருக்கின்றன. வணிகத்துறையில் முக்கியமான ஏடுகளில் ஒன்றாக கருதப்படும் ‘லைவ் மின்ட்’ ஆங்கில ஏடு, பினராயி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு ‘‘இந்தியா வின் முன் மாதிரி அரசு கேரளத்தின் இடதுசாரி அரசே’’ என புகழ் மாலை சூட்டியிருக்கிறது.அப்படி என்ன கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு சாதித்துவிட்டது என்பதையும் ‘லைவ் மின்ட்’ ஏடு பட்டியலிட்டிருக்கிறது.
குறிப்பாக பினராயி அரசின் ஒன்பது நடவடிக்கைகள் - சிறியதுபோல தெரிந்தாலும் - இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் மேற்கொண்டிராத - சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிற முக்கியமான நடவடிக்கைகள் என குறிப்பிட்டிருக்கிறது.
பினராயி அரசு பதவியேற்றவுடன் முதல் பட்ஜெட்டில் முதல் அறிவிப்பாக பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு வகைகள் மீது "கொழுப்பு வரி" விதித்தது. இந்தியாவில் யாரும் செய்யத் துணியாத காரியம் இது. கேரள மக்களின் - கேரளத்துக் குழந்தைகளின் சுகாதாரத்தை - உடல்நலனை பிரதானப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை எளியது போலத் தெரிந்தாலும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நடவடிக்கை. உள்நாட்டுத் தயாரிப்புகள் மீது கவனத்தை திருப்ப வைத்த நடவடிக்கை என மின்ட் ஏடு சுட்டிக்காட்டியுள்ளது.
கேரளம் முழுவதும் ஆயிரம் இடங்களைத் தேர்வு செய்து அந்தப் பகுதி முழுவதும் இலவச வைபை மண்டலமாக அறிவித்து செயல்படுத்தியது. அது மட்டுமின்றி, சுமார் 20 லட்சம் ஏழை- நடுத்தர குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்காக தனது முதல் பட்ஜெட்டில் ரூபாய் ஆயிரம் கோடியை ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்தியது. இந்தியாவில் பணபலம் மிக்க மாநிலங்களில் கூட இது சாத்தியமாகவில்லை. ஆனால், "இணைய தள சேவை என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை" என்று இடது ஜனநாயக முன்னணி அரசின் நிதியமைச்சரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் குறிப்பிட்டதை அப்படியே செயல்படுத்தியிருக்கிறது பினராயி அரசு.
இவற்றைவிட மிக முக்கியமான மூன்றாவது நடவடிக்கை ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்னுதாரணம். தமிழகம் உட்பட எந்த மாநிலத்திலும் பிற மாநிலங்களிலிருந்து வந்து குறைந்த கூலிக்கு வேலைசெய்து பிழைப்பு நடத்தும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த வசதிகளும் இல்லை. கேரளத்தில் இதை மாற்றிக் காட்டியது பினராயி அரசு. பிற மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து கேரளத்தில் பல்வேறு துறைகளில் முறைசாராத் தொழிலாளர்களாக கிட்டத்தட்ட 34 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை 2016 ஜூலை முதல் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.
திருநங்கைகளுக்கு "திருநங்கை " என்று பெயர் வைத்ததோடு தமிழகம் தனது கடமையை முடித்துக் கொண்டது. ஆனால் திருநங்கைகளுக்கு அரசுத் துறையில் பெரிய அளவில் இடஒதுக்கீடு செய்து பணிவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து செயல்படுத்தியிருக்கிறது பினராயி அரசு. கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டமாக 60 திருநங்கைகள் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றில் திருநங்கைகள் அதிகாரப்பூர்வமாக வேலைக்கு எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது தவிர, 2017 பட்ஜெட்டில் திருநங்கைகளுக்கு என ரூ.10 கோடியை ஒதுக்கி, கேரளம் முழுவதும் உள்ள வயது முதிர்ந்த திருநங்கைகள் அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கியிருக்கிறது. கடந்த ஏப்ரலில் திருநங்கைகளுக்கு என பிரத்யேகமாக ஒரு விளையாட்டு விழாவையும் நடத்தியிருக்கிறது. இதுவும் இந்தியாவிலேயே முதல் நடவடிக்கை ஆகும்.
ஊடகங்கள் பெரிய அளவிற்கு வெளியிடாத அதி முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை, கேரளத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இளம்பெண் குழந்தைகளுக்கு சானிடரி நாப்கின் இலவசமாக வழங்கும் திட்டம். இதை நடப்பு கல்வி ஆண்டு முதல் பினராயி அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இதற்காக ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளம்பெண் குழந்தைகளின் சுகாதாரம் என்பது அவர்களது அடிப்படை உரிமை; சானிடரி நாப்கின் வாங்க முடியாமல் பல பெண் குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதை தடுப்பதும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உணரச் செய்வதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என கடந்த மே 17 அன்று பினராயி விஜயன் தனது முகநூல் பக்கம் வழியாக அறிவிப்பு வெளியிட்டார். "ஸி பேடு" (She Pad) என அமலுக்கு வரும் இந்த திட்டம் கேரள மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்; ஆனால் அறிவிப்போடு அது நின்றுவிட்டது. கேரளத்தில் அது அமலாகிறது.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு என்று இந்தியாவில் எங்குமே சிறப்புப் பாடப் புத்தகங்கள் இல்லை. கேரள கல்வித்துறை இந்த கல்வி ஆண்டு முதல் இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கிறது. தலைசிறந்த கல்வியாளர்கள், மனநல வல்லுநர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் ஆலோசனைகளுடன் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பிரத்யேக பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 24 வகையிலான உடல் ஊனம் மற்றும் மனநல பாதிப்பு அடைந்த குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்படியெல்லாம் ஒரு முயற்சி கூட எந்த மாநிலமும் இதுவரை எடுத்ததில்லை.
அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போன்று அதிரடியான மற்றொரு திட்டத்தை கடந்த ஏப்ரலில் பினராயி அரசு அமலுக்கு கொண்டு வந்தது. ரூ. 6 லட்சமும் அதற்கு குறைவாகவும் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ள அனைத்து கல்விக் கடன்களையும் அரசாங்கமே செலுத்தும் என்பது தான் அந்த அறிவிப்பு. இதற்காக 900 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்தது பினராயி அரசு. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கல்விக்கடனுக்காக வங்கிகள், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களிடமும் வசூலிக்கும் பொறுப்பைக் கொடுத்து கந்துவட்டிக்காரர்களைவிட கொடூரமான முறையில் மாணவர்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிற நிலையில், ஏழை- நடுத்தரக் குடும்பத்து மாணவர்களைத் தனது கரங்களில் தாங்கிப் பாதுகாக்கும் இந்த மகத்தான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது இடது ஜனநாயக முன்னணி அரசு.
மே 29 அன்று கோழிக்கோட்டில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நாட்டிலேயே முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி செய்து கொடுத்த மாநிலமாக கேரளத்தை அறிவிக்க இருக்கிறார் முதலமைச்சர் பினராயி விஜயன். கடைசியாக எஞ்சியிருந்த 1.30லட்சம் வீடுகளும் கடந்த ஏப்ரல் 1ஆம்தேதி கணக்கீட்டின்படி முழுமையாக மின் வசதி செய்து தரப்பட்டுள்ளன.
இவற்றில் 40 ஆயிரம் வீடுகள் தாழ்த்தப்பட்ட மக்களுடையவை; 20 ஆயிரம் வீடுகள் பழங்குடி மக்களுடையவை. இத்திட்டத்திற்காக ரூ. 124 கோடி ஒதுக்கீடு செய்து முழுமையாக செலவிடப்பட்டிருக்கிறது. உண்மையில், கேரளா நீண்ட பல்லாண்டுகளுக்கு முன்பாகவே முழுமையான மின்மயமாக்கப்பட்ட மாநிலமாகிவிட்டது என்ற போதிலும் முழுமையான மின்மயம் ஆக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்படுவதற்கான மத்திய அரசின் மிக நுணுக்கமான விதிமுறைகளை செயல்படுத்தாமல் இருந்தது. அதாவது ஒரு சிறு குடிசை கூட விடுபடக்கூடாது என்ற அந்த விதியை பினராயி அரசு தற்போது பூர்த்தி செய்து கேரளத்தை ஜொலிக்க வைத்திருக்கிறது.
இந்தியாவின் நூறு சதவீத முழுமையான சுகாதாரம் அடைந்த மாநிலமாக மாறும் மிகப்பெரும் நோக்கத்துடன் கடந்த நவம்பர் மாதத்தில் பினராயி அரசு கேரளத்தை பொதுவெளியில் மனிதக்கழிவுகள் இல்லாத மாநிலமாக அறிவித்தது. கடந்த ஒரே ஆண்டில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவிட்டு மாநிலம் முழுவதும் 2லட்சம் புதிய கழிப்பறைகளை கட்டி முடித்திருக்கிறது. இந்தியாவின் மிக அதிக மக்கள்தொகை உள்ள மாநிலங்களில் இதை சாதித்துக் காட்டியிருக்கிற முதல் மாநிலம் கேரளமே. ஏற்கெனவே சிக்கிம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை இதை சாதித்திருந்தாலும் அவை சிறிய மாநிலங்கள். மக்கள் தொகையும் மிகக் குறைவு.
- இந்த ஒன்பது சாதனைகளையும் ‘லைவ் மின்ட்’ஏடு விரிவாகப் பட்டியலிட்டு விளக்கியிருக்கிறது. இவற்றுடன் இன்னும் பல்வேறு சாதனைகளைப் புரிந்த பெருமிதத்துடன் மே 25 வியாழனன்று திருவனந்தபுரத்தில் தனது முதலாமாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது இடது ஜனநாயக முன்னணி அரசு.அந்த விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளத்தின் மலைப்பகுதி மற்றும் கடலோரப் பகுதி நெடுஞ்சாலைகளை மிக விரைவாக மேம்படுத்துவதே அடுத்த உடனடி நடவடிக்கை என அறிவித்தார்.திருவனந்தபுரத்தில் உள்ள நிஷா காந்தி திறந்தவெளி கலையரங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அந்த எழுச்சிமிகு விழாவில்உரையாற்றிய பினராயி, ஓராண்டு காலத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு நிறைவேற்றியுள்ள காரியங்கள் கேரளத்தின் எதிர்க்கட்சிகளை தூங்கவிடாமல் செய்திருக்கின்றன எனக்குறிப் பிட்டார்.
கேரளத்து மக்கள், வெளிநாடு வாழ் கேரளமக்கள் மற்றும் அரசியல் வேறுபாடுகள் மறந்து அரசாங்கத்தின் நல்ல நடவடிக்கைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அனைத்துத் தரப்பு மக்களும் தமது அரசின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.நாடே போற்றும் சாதனைகளுடன் தனது ஓராண்டை பினராயி அரசு நிறைவுசெய்த தருணத்தில், அரசுக்கு எதிராக ஏதேனும் போராட்டம்நடத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் காங்கிரசும், பாஜகவும் சில இடங்களில் ஊர்வலங் களை நடத்தின. எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும், பினராயி அரசாங்கம் நன்றாக செயல்படவில்லை என்று விமர்சித்தனர். ஆனால் அவர்களால் பினராயி அரசின் செயல்பாடின்மை குறித்துப் பட்டியலிட முடியவில்லை.
No comments:
Post a Comment